பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பை ஏற்று ஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷின்யன் இன்று சிங்கப்பூருக்கு தமது முதலாவது அதிகாரத்துவ வருகையை மேற்கொள்கிறார்.
அவரது வருகை இரு நாடுகளுக்கிடையே நிலவும் நட்பார்ந்த உறவைப் பிரதிபலிக்கிறது என்றும் சிங்கப்பூரும் ஆர்மீனியாவும் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்றும் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
திரு பஷின்யனுக்கு இன்று இஸ்தானாவில் அதிகாரத் துவ வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் ஆர்மீனியப் பிரதமர், அதிபர் ஹலிமா யாக்கோப், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் ஆகியோரைச் சந்திப்பார். பிரதமர் லீ, திரு பஷின்யானுக்கு அதிகாரத்துவ பகல் விருந்தளிப்பார்.
சிங்கப்பூரில் இருக்கும்போது ஆர்மீனிய்ப பிரதமர், பொரு ளியல் வளர்ச்சிக் கழகத்துக்குச் சென்று அங்கு சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஏற்பாட்டில் நடைபெறும் வட்டமேசைக் கூட்டத்தில் வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பார்.
பின்னர் அவர் பூமலைக்குச் செல்வார். அங்கு அவரைக் கௌரவிக்கும் வகையில் அவரது பெயரிலும் ஆர்மீனியன் தேவாலயத்தின் பெயரிலும் ஆர்க்கிட் மலர்கள் வெளியிடப் படும். ஆர்மீனியன் ஸ்திரீட்டில் உள்ள முதலாவது பூமலைத் தோட்டத்தில் வாண்டா மிஸ் ஜோக்கிம் மலர்களின் சிற்பத்தைத் திறந்துவைப்பார். நாளை நாடு திரும்புவதற்கு முன் திரு பஷின்யன், சிங்கப்பூரில் உள்ள ஆர்மீனியன் சமூகத்தினரைச் சந்திப்பார்.

