ஹலிமா: இணக்கத்தன்மை மாநாட்டை அடிக்கடி நடத்த வேண்டும்

ஹலிமா: இணக்கத்தன்மை மாநாட்டை அடிக்கடி நடத்த வேண்டும்

2 mins read
de85d3a6-383c-4bba-8662-5976f67e9a0e
PHOTO: INTERNATIONAL COUNCIL OF NURSES -

சிங்கப்பூரின் சமயக் குழுக்கள் உலக சமூகங்களின் ஒரு பகுதி. ஆகவே, உலக அளவில் எது நடந்தாலும் சிங்கப்பூரிலும் அதன் தாக்கம் தென்படும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்கொள்ள அண்மையில் சிங்கப்பூரில் இடம் பெற்ற அனைத்துலக ஒத்திசைந்த சமூகங்கள் மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றும் அப்போதுதான் வெவ்வேறு சமய நம்பிக்கைகளுக்கிடையே சிறந்த புரிந்துணர்வு ஏற்படும் என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.

"உலகமயமாதலை நோக்கினால், அதில் வர்த்தக உலகத்தாலும் நிதி உலகத்தாலும் இயக்கப்படும் ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால், அதில் மக்களை ஒன்றிணைக்கும் அம்சம் இருப்பதை நாம் எதிர்பார்க்க முடியாது," என்று திருவாட்டி ஹலிமா நேற்று முன்தினம் நடைபெற்ற 16வது இன, சமயங்களுக்கிடையிலான ஒற்றுமை இரவு நிகழ்ச்சி யில் விவரித்தார்.

"ஆக, அனைத்துலக ஒத்திசைந்த சமூகங்கள் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று நம்புகிறேன். தேசிய சமயக் குழுக்கள், அனைத்து நிலைகளிலும் உள்ள முக்கியமான தேசிய தலைவர்கள், உலகத் தலைவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்து சமூக ஒத்திசைவு சமய நம்பிக்கை, ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்க வழி ஏற்படும்," என்று அதிபர் ஹலிமா வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு அதிபர் தெரிவித்த யோசனையின் விளைவாக, இந்த ஆண்டு அனைத்துலக ஒத்திசைந்த சமூகங்கள் மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. அந்த மூன்று நாள் மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 1,000 பேராளர்கள் கலந்துகொண்டனர்.