புவாங்கோக் வட்டாரவாசிகள் நேற்று நடைபெற்ற அக்கம்பக்க கேளிக்கை விழாவில் அங்கு அமையவிருக்கும் புதிய ஒருங்கிணைந்த வளாகத்தின் விவரங்களைத் தெரிந்துகொண்டதுடன் அதன் மாதிரி வடிவத்தையும் பார் வையிட்டனர். அந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் சமூக மன்றம், சில்லறை விற்பனைக் கடைகள், தனியார் இல்லங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இருக்கும்.
புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள 3.7 ஹெக்டர் நிலத்தில் கட்டப்படவிருக்கும் வளாகம் 2022ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும். 680 தனியார் வீடுகளுக்குக் கீழ் அமையும் மூன்று மாடி கடைத்தொகுதியில் உணவங்காடி நிலையம், குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஆகியவையும் உள்ளடக்கப்படும்.
கேப்பிட்டலேண்ட் மற்றும் சிட்டி டெவலப்மண்ட்ஸ் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமான இது $777.78 மில்லியன் செலவில் கட்டப்படும். அக்கம்பக்க கேளிக்கை விழா வில் 1,500 குடியிருப்பாளர்களுடன் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், பாசிர் ரிஸ் குழுத் தொகுதியின் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங், டியோ செர் லக், கான் தியாம் போ, செங்காங் வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லாம் பின் மின் ஆகி யோரும் கலந்துகொண்டனர்.
"புதிய சமூக மன்றம், ஆகப் பெரிய சமூக மன்றங்களில் ஒன் றாகத் திகழும். இதில் 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பன்நோக்கு மண்டமும் அமையும்.
"நான்காம் தலைமுறைத் தலை வர்கள், சிங்கப்பூரர்களை இது போன்ற சமூகத் திட்டங்களில் ஈடுபடுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
"நாம் விரும்பும் கிராமத்து உணர்வைக் கொண்டுவர நாம் என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்து வருகிறோம். வெவ்வேறு பணிகளை நாம் ஒன்றுசேர்ந்து செய்தால், நாம் விரும்பும் சமூகத்தை உருவாக்கிவிடலாம்," என்றார் அமைச்சர் இங்.
புதிய வளாகத்தில் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை என்பது பற்றி குடியிருப்பாளர்களிடம் கருத் துகள் கேட்கப்பட்டு வருகிறது.

