முறையான அனுமதியின்றி ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டதன் தொடர்பில் 'எல்டி சம்போ' கட்டுமான நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்கு 9,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வானூர்திகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள முதல் தண்டனை இது.
2017ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியன்று ஆளில்லா வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டதை அந்நிறுவனம் முன்னர் ஒப்புக்கொண்டது. ஆகாயப் போக்குவரத்துச் சட்டத்தின்படி அந்நிறுவனம் செய்தது குற்றம் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 'கிளாஸ் ஒன்' நடவடிக்கைக்கான உரிய அனுமதியைப் பெறாமல் 'எல்டி சம்போ' கட்டுமான நிறுவனம் வெளிப்புறத்தில் அந்த வானூர்தியை வர்த்தகக் காரணங்களுக்காக இயக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வானூர்தியின் வடிவம் 'டிஜியை பெண்டம் 4' என்றும் அதன் எடை 1.38 கிலோகிராம் என்றும் கூறப்படுகிறது.
கேளிக்கை அல்லது ஆய்வு காரணங்களைத் தவிர மற்ற நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படும் வானூர்திகளுக்கு 'கிளாஸ் ஒன்' அனுமதி தேவை என்று சிங்கப்பூர் சிவில் விமான ஆணையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. வர்த்தக காரணங்களுக்காக புகைப்படம் எடுக்கும் நிறுவனங்களுக்கும் ஆகாயக் கண்காணிப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.

