வாகனமோட்டும் உரிம அட்டைகள் வழங்குவது நிறுத்தப்படலாம்

வாகனமோட்டும் உரிம அட்டைகள் வழங்குவது நிறுத்தப்படலாம்

1 mins read

போக்குவரத்து போலிஸ் துறை மின்னிலக்கமயமாதலை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், வாகனமோட்டிகள் விருப்பப்பட்டு கேட்டால் அன்றி வாகனமோட்டும் உரிம அட்டைகள் வழங்குவது நிறுத்தப்படலாம் என்று உள்துறை அமைச்சின்மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் நேற்று தெரிவித்தார்.

அதற்கு ஏதுவாக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். அதன்படி வாகனமோட்டி கள் தங்களிடம் வாகனமோட்டும் உரிம அட்டைகளைக் காட்ட தேவை இருக்காது என்றார் அவர். தனிநபரின் வாகனமோட்டும் தகுதியை அறிந்துகொள்ள அவரது பெயரும் அடையாள அட்டை எண்ணும் இருந்தால் போதுமானது என்றும் திருவாட்டி சுன் சாலைப் போக்கு வரத்து திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பின் போது விவரித்தார்.

மேலும் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்படும் காலம் மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உயர்த்தப்படும் என்று மசோதா பரிந்துரைக்கிறது. இது தொடர் குற்றவாளிகளுக்கு அதிக காலத்துக்குத் தடை விதிக்க வகை செய்யும். உதாரணத்துக்கு, ஆறு முறை அல்லது அதற்கு மேல் தற்காலிகத் தடை விதிக்கப்படும் வாகனமோட்டிகளின் உரிமத்துக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்றும் திருவாட்டி சுன் விளக்கினார்.