தஞ்சோங் பகாரிலுள்ள செங் வொங் பியோ கோயிலுக்கு வெளியே 1954 முதல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரு ஜாடி நிறைய சீனத் தேநீர் வைத்திருக்கப்பட்டது. ரிக்ஷா இழுத்து களைப்படைந்தவர்கள், நன்றியுடன் தேநீரைப் பருகிவிட்டு, சிங்கப்பூரின் வெயிலில் வெறுங்காலில் மீண்டும் ரிக்ஷா இழுக்கச் செல்வார்கள். இந்த வழக்கத்தைத் தொடங்கியவர் கோயிலைத் தோற்றுவித்த துறவி ரெவரண்ட் ருய் யூ என கோயிலின் நீண்டகால மேலாளர் நினைவுகூர்ந்தார். துறவி ருய் யூ, சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்திலுள்ள ரிக்ஷா இழுப்பவர்கள், துறைமுக ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்காக 1905ஆம் ஆண்டு கோயிலைத் தொடங்கினார்.
இப்போது, ஒயேசியா ஹோட்டல், ஐகான் ரெசிடன்ஸ் போன்ற வானுயர்ந்த கட்டடங்களின் மத்தியில் சிறிதாகத் தோன்றும் 114 ஆண்டுகாலப் பழமைவாய்ந்த இக்கோயில், சிங்கப்பூரின் டாவிச சமூகத்தில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. நகர தெய்வத்தை வழிபடும் மற்ற கோயில்களின் தலைமையகமாக இக்கோயில் செயல்படுகிறது. அதுமட்டுமன்றி, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக "ஆவிகளுக்குத் திருமணங்கள்" செய்து வைக்கும் சிங்கப்பூரின் மத்திய கோயிலும் இதுவே. அவ்வாறு செய்து வைக்கப்பட்ட திருமணங்களின் ஆயிரத்துக்கும் மேலான அடையாளத் தகடுகள் இன்னமும் கோயிலில் உள்ளன.
இத்தனை வரலாற்றுச் சிறப்பும் வழக்கத்திற்கு மாறான கலாசார மரபுடைமையும் இருந்தபோதிலும், மறுமேம்பாட்டிலிருந்து கோயிலுக்கு இதுவரை எந்தவித அதிகாரபூர்வ பாதுகாப்பும் கிடைக்கவில்லை. தற்காலிக உரிமத்தின்கீழ் அவ்விடத்தில் இருந்துவரும் கோயிலின் உரிமம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அல்லது 2021-க்கு அப்பால் புதுப்பிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய 21 வழிபாட்டுத் தலங்களை ஈராண்டுகளாக ஆய்வு செய்த சிங்கப்பூர் மரபுடைமை சங்கத்தின் மூன்று ஆய்வாளர்கள், ஆதரவும் பாதுகாப்பும் அவசரமாகத் தேவைப்படுவதாக அடையாளம் காட்டிய பன்னிரண்டு வழிபாட்டுத் தலங்களில் இக்கோயிலும் ஒன்று.
ஆய்வுக் குழுவை மனித இன ஆய்வாளர் விவியன் வீ வழிநடத்தினார். ஆய்வாளர்கள் லின் வோங், ஃபவ்சி இஸ்மாயில் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பகாலக் குடியேற்றப் பகுதிகளான தெலுக் ஆயர், தஞ்சோங் பகார், தஞ்சோங் மாலாங் ஆகிய வட்டாரங்களிலுள்ள வழிபாட்டுத் தலங்களின் முதல் விரிவான ஆய்வை இவர்கள் மேற்கொண்டனர். சீனக் கோயில்கள், குலமரபுச் சங்கங்கள், இந்து கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகியவற்றை இவர்கள் ஆராய்ந்தனர். ஆய்வுக் குழுவினரின் 321 பக்கங்கள் கொண்ட அறிக்கை, பாதுகாக்கப்படும் இடமாகத் தகுதிபெறத் தவறிய வரலாற்றுத் தளங்களை ஆராய்ந்தது.
செங் வொங் பியோ கோயிலின் வரலாறு, சடங்குகள், விழாக்கள், தனித்துவமிக்கக் கட்டடக்கலை அம்சங்கள், ஹோட்டல் தொழிலதிபர் கூ டெக் புவாட்டின் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கிய 79 ஆண்டுகால மணி ஆகியவற்றைக் குழுவினர் ஆவணப்படுத்தியுள்ளனர். பாதுகாக்கப்படாத மற்ற வழிபாட்டுத் தலங்களில் சிங்கப்பூரின் ஆகப் பழமையான சீனக் கோயில்களில் ஒன்றான ஃபூக் டெட் சூ கெக் கோயிலும் ஒன்று. இதன் ஆரம்பகாலம் 1819 வரை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வளவு பழமையானதொரு கோயில், சிங்கப்பூரின் 72 தேசிய நினைவுச்சின்னங்களிலும் 7,000க்கும் மேலான பாதுகாக்கப்படும் கட்டடங்களிலும் இடம்பெறவில்லை. ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படவேண்டிய தற்காலிக உரிமத்துடன் பால்மர் சாலையில் கோயில் செயல்படுகிறது.
பக்கத்திலுள்ள ஹாஜி முகம்மது சாலி பள்ளிவாசல், கெராமட் ஹபிப் நோ ஆகியன 2025ஆம் ஆண்டு காலாவதியாகும் வாகாஃப் நிலத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர் திரு ஃபவ்சி தெரிவித்தார். "அவசர மேம்பாட்டுத் தேவைகள் எழுந்தால், இவை எந்நேரத்திலும் இடம்பெயரவேண்டிய அபாயத்தை எதிர்நோக்குகின்றன," என்றார் அவர்.
இந்த வழிபாட்டுத் தலங்களின் கலாசார மரபுடைமையை இழந்துவிடாதிருக்க இவ்விடங்களில் சிலவற்றுடன் சேர்ந்து செயல்பட சிங்கப்பூர் மரபுடைமை சங்கம் திட்டமிடுகிறது. இவ்வாண்டு பிற்பகுதியில், இந்தத் தலங்களுக்கு நடை உலா தொடங்கவும் சங்கம் திட்டமிட்டுள்ளது.

