இவ்வாண்டுக்கான தேசிய தின அணிவகுப்புப் பைகளில் பிளாஸ்டிக் போத்தல்களுக்குப் பதிலாக மறுபயனீட்டு வகையைச் சேர்க்கும் திட்டம், செலவு கருதி கைவிடப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் உள்ள இரு சிறிய போத்தல்களுக்குப் பதிலாக 750 மில்லிலீட்டர் அளவிலான தண்ணீர் போத்தல் ஒன்று பைகளில் வைக்கப்படும்.
அணிவகுப்புப் பைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை வைப்பதற்குப் பதிலாகச் சுற்றுப்புறத்திற்கு ஏதுவாக வேறு ஏதேனும் வழங்கப்படலாமா என்று நீ சூன் குழுத்தொகுதியைச் சேர்ந்த திரு லூயிஸ் இங் கேட்டிருந்த கேள்விக்கு தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் எழுத்துவழி பதிலளித்திருந்தார்.
ஒவ்வொரு தேசிய தின அணிவகுப்புக்கும் திட்டமிடும் நிர்வாகக் குழு, நிலைத்தன்மையைக் கருத்தில் கொள்ளும். அதே நேரத்தில் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும் பார்வையிடுவதற்காகவும் வரும் சிங்கப்பூரர்களின் நலனையும் கருதும். மறுபயனீட்டு போத்தல்களில் தண்ணீர் வழங்கும் திட்டம் இருந்தபோதும் மலிவான விலையில் தண்ணீர் வழங்குநர்களின் எண்ணிக்கையில் இருந்த தட்டுப்பாட்டால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று டாக்டர் இங் விவரித்தார்.

