மூத்த குடிமக்கள் தங்கள் பலவீனத்தை எதிர்கொள்ள உதவும் உடற்பயிற்சித் திட்டம் ஒன்று நாடளவில் செயல்படுத் தப்படவுள்ளது. மனநலம், ஞாபக சக்தி, செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் மூத்தோரை வலிமை பெறச் செய்ய இத்திட்டம் உதவும் என்று கூறப்பட்டது.
2017ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட 'ஹேப்பி' என்ற இத்திட்டம் ஆரோக்கியமான முறையில் மூப்படைவதை ஊக்குவித்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 700 முதியவர்கள் பலனடைந்துள்ளனர்.
தற்போது 37 இடங்களில் மட்டுமே நடத்தப்படும் இத்திட்டத் தின் நடவடிக்கைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் முதியோர் நடவடிக்கை நிலையங்கள், கட்டடக் கீழ்த்தளங்கள் என மொத்தம் 130 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.
இதன் தொடர்பில் தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு, 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட பலவீனமான, ஞாபக மறதியுடைய 115 முதியவர்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இந்த உடற்பயிற்சித் திட்டத்தின் வழி ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேலானோர் சற்று உடல் வலிமை பெற்றதாக நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.
அத்துடன் 70 விழுக்காட்டினர் தங்களின் நடை வேகத்திலும் நாற்காலியிலிருந்து எழும் உறுதியிலும் முன்னேற்றம் கண்டதாகவும் கூறப்பட்டது. ஞாபக சக்தி தொடர்பிலும் கிட் டத்தட்ட 74 விழுக்காட்டினர் முன்னேற்றம் அடைந்திருந்தனர். 40 விழுக்காட்டினர் தங்களிடம் மனச்சோர்வு குறைந்துள்ளதாகவும் கூறியிருந்தனர். முதியவர்கள் கீழே விழும் சம்பவங்களும் 40 விழுக்காடு குறைந்திருந்ததாகக் கூறப்பட்டது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை நடத்தி வரும் இத்திட்டத்தின்கீழ் பங்கேற்போர், அறிவாற்றலும் உடற்பயிற்சியும் ஒருசேர அமைந்த பயிற்சிகளில் ஈடுபடுவர். உதாரணத்திற்கு ஒரே இடத்தில் நடந்துகொண்டே முப்பதிலிருந்து ஒன்றுவரை எண்ணவேண்டும். அத்துடன் மூன்றாவது எண்ணில் கைதட்ட வேண்டும். இதுபோன்ற பயிற்சி களில் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் முதியவர்கள் செயல்படுவர். இத்திட்டத்தின்கீழ் முதியவர்கள் தங்களின் ரத்த அழுத்தத்தையும் நாடியையும் தாங்களே பரிசோதித்துக்கொள் ளவும் கற்றுக்கொள்வர்.
அத்துடன் சக மூத்தோருக்காக உடற்பயிற்சிகளை நடத்தும் பயிற்றுவிப்பாளர்களாக மூத்தோரே மாறித் தொண்டூழியம் செய்யவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களில் 16 பேரில் ஒருவர் பலவீனமுடையவராக இருக்கிறார். பத்தில் ஒருவருக்கு முதுமை மறதி நோய் ஏற்படுகிறது.

