ஆறு கெபிட்டாலாண்ட் கட்டடங்களில் சூரிய சக்தி

ஆறு கெபிட்டாலாண்ட் கட்டடங்களில் சூரிய சக்தி

2 mins read
d49b8c4b-46b5-4386-9449-a39162b2d5e0
-

இவ்வாண்டு இறுதிக்குள் ஆறு கெபிட்டாலாண்ட் கட்டடங்களின் கூரையுச்சியில் 21,000க்கும் மேலான சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்படவுள்ளன. இதன் தொடர்பில் கெபிட்டாலாண்ட் நிறுவனமும் செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸும் கூட்டிணைந்திருப்பதாக இரு நிறுவனக் குழுமங்களும் நேற்று தனித்தனி அறிவிப்புகளைச் செய்தன.

சிங்கப்பூரில் ஒரு நிலச்சொத்து நிறுவனம் இவ்வளவு பெரிய அளவில் கூரையுச்சியில் சூரிய சக்தி வசதியை அமைப்பது இதுவே முதல்முறை. செம்ப்கார்ப் நிறுவனம் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தி, அவற்றுக்கு உரிமையேற்று நிர்வகிக்கும். சூரிய சக்தி தகடுகளைக் கொண்டு உற்பத்தியாகும் மின்சாரம், கட்டடங்களின் மின்சாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். தகடுகளைப் பொருத்துவதற்கு கெபிட்டாலாண்ட் நிறுவனத்திற்கு எந்தச் செலவும் ஆகாது.

கெபிட்டாலாண்டின் ஆறு கட்டடங்களும் எண் 1 சாங்கி பிசினஸ் பார்க் அவென்யூ 1, எண் 9 சாங்கி சவுத் ஸ்திரீட் 3, எண் 2 சினோகோ சவுத் ரோடு, எண் 40 பென்ஜுரு லேன், டெக்பாயின்ட், லாஜிஸ்டெக் ஆகிய முகவரிகளில் அமைந்துள்ளன. கெபிட்டாலாண்டின் அசெண்டஸ் நிலச்சொத்து முதலீட்டு அறநிதியின்கீழ் இந்தக் கட்டடங்கள் உள்ளன. பொருத்தப்படும் சூரிய சக்தி தகடுகளால் ஆண்டுதோறும் 10,292 மணிநேர மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும். இது, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,300 நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்திற்கு நிகரானது.

சூரிய சக்தியின் பயன்பாட்டால், ஆண்டுதோறும் 4.3 மில்லியன் கிலோகிராமுக்கு மேலான கரியமிலவாயு குறைக்கப்படும். இது, 937 கார்களைச் சாலைகளிலிருந்து அகற்றுவதற்கு அல்லது 52,000க்கும் மேலான மரங்களை நடுவதற்கு நிகரானது.