முதியவருக்கு உதவி செய்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியருக்குப் பாராட்டு

காலில் பலமிழந்த முதியவர் ஒருவர் சைனாடவுன் வட்டாரத்திலுள்ள மேம்பாலத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் சுமார் மூன்று மணி நேரம் சிக்கித் தவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை, படிகளை ஏறி மேம்பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த அந்த 90 வயது வயோதிகருக்கு இந்தப் பிரச்சினை திடீரென ஏற்பட்டதாக அவரது மகள் திருவாட்டி ஃபெலிஷியா லீ, 62,’ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார். ஆயினும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் திருவாட்டி ஈஸ்வரி வேலு, அந்த முதியவர் பத்திரமாகக் கீழே இறங்குவதற்குக் கைகொடுத்தார்.

திருவாட்டி ஈஸ்வரியின் இந்த உதவிக்காக திருவாட்டி லீயின் சகோதரர் திரு ஜோனத்தன் லீ, சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தமது நன்றியை வெளிப்படுத்தினார். திரு லீ செய்திருந்த அந்தப் பதிவு, குறைந்தது 3,600 ‘லைக்’குகளைப் பெற்றது. அது 1,100 முறைக்கு மேல் பகிரப்பட்டது.

இவ்வளவு பாராட்டுகளைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் உதவி செய்வது தமக்கு இயல்பாகத் தோன்றுவதாகவும் திருவாட்டி ஈஸ்வரி கூறினார்.