போலி ஆடம்பரப் பொருட்களை விற்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பெண்களும் இரு ஆண்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர். ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் உள்ள கடைகளில் போலிசார் நடத்திய சோதனையில் இவர்கள் பிடிபட்டனர்.
கைதானோர் 26 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 16 மணிநேரமாக ஏழு கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் அறுவரும் சிக்கினர்.
வர்த்தக முத்திரை மீறல் தொடர்பில் காலணிகள், கடிகாரங்கள், பைகள், தொப்பிகள், அணிகலன்கள் என்று 500க்கும் மேற்பட்ட போலி ஆடம்பரப் பொருட்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட $80,000 என்று கூறப்பட்டது.
இதன் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

