வெவ்வேறு மானபங்கச் சம்பவங்களின் தொடர்பில் ஒன்பது பேர் குற்றம் சாட்டப்படுகின்றனர். அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 84 வயது முதியவரும் ஒருவர். இந்தச் சம்பவங்கள் கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கும் இவ்வாண்டு மே மாதத்திற்கும் இடையே நிகழ்ந்ததாக போலிசார் புதன்கிழமை (ஜூலை 10) தெரிவித்தனர். அவை பின்வருமாறு:
2018
நவம்பர் மாதம் 8ஆம் தேதி: தாம்சன் ரோட்டில் 42 வயது ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக 20 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
டிசம்பர் மாதம் 8ஆம் தேதி: ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள ஒரு கடைக்கு அருகே 28 வயது ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக 25 வயது பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
2019
பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி : சுவா சூ காங் அவென்யூ 4ல் 50 வயது ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக 24 வயது பெண் ஒருவர் கூறினார்.
மார்ச் 5ஆம் தேதி: அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே 37 வயது ஆடவர் தன்னை இரு முறை மானபங்கம் செய்ததாக 22 வயது பெண் ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 13ஆம் தேதி: உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் 32 வயது ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக 40 வயது பெண் ஒருவர் புகார் செய்தார்.
மார்ச் 28ஆம் தேதி: ஆர்ச்சர்ட் ரோடு நெடுகில் 26 வயது ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக 22 வயது பெண் ஒருவர் தெரிவித்தார்.
மே 12ஆம் தேதி: அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் 84 வயது முதியவர் தன்னை மானபங்கம் செய்ததாக 46 வயது பெண் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மே 13ஆம் தேதி: வடகிழக்கு ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த ரயிலில் 55 வயது ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக ஒரு பெண் கூறினார்.
மே 28ஆம் தேதி: உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் 33 வயது ஆடவரால் மானபங்கம் செய்யப்பட்டதாக 40 வயது பெண் சொன்னார்.
மானபங்கம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம், பிரம்படிகள் ஆகியவை விதிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர் 14 வயதுக்கும் குறைவாக இருந்தால் சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகள் வரை இருக்கலாம்.

