தங்களது சொந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவு திரட்ட சிங்கப்பூரைப் பயன்படுத்திய ஆறு மியன்மார் நாட்டவர்களை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு கைது செய்திருக்கிறது. மியன்மாரில் வன்முறை தாக்குதல்களை நடத்திய 'அரக்கான் ஆர்மி' என்ற கிளர்ச்சிக் குழுவை ஆதரிக்கும் அவர்களது செயல் சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரின் அரக்கான் சங்கத்தைச் சேர்ந்த அந்த அறுவரைப் பற்றி மியன்மார் ஊடகங்கள் தகவல் வெளியிட்டதை அடுத்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சின் அறிக்கை வெளிவந்தது. ரக்கைன், சின் ஆகிய மாநிலங்களின் சுயாட்சியை அதிகரிப்பதற்காகப் போராடும் இந்த அமைப்பு 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது. அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக மியன்மார் அறிவித்திருந்தது.

