சிங்கப்பூருக்குச் செல்லும் இந்தியாவின் ‘விஸ்தாரா’ பயணச் சேவைகள்

இந்தியாவின் ‘விஸ்தாரா’ முழுச் சேவை விமான நிறுவனம் தனது அனைத்துலகப் பயணச் சேவையை அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூரையே தனது முதல் பயண இடமாக்கிக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.  டாட்ட சன்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள விஸ்தாரா, டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் ஒரு பயணத்தையும் மும்பையிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் ஒரு பயணத்தையும் நாள்தோறும் வழங்கவுள்ளது.

அனைத்துலகப் பயணங்களின் தொடக்கத்தால் மேலும் பெரிய அளவுக்கு வளர முடியும் என்றும் இன்னும் கூடுதல் இலாபம் பெறமுடியும் என்றும் இழப்புகளை எதிர்நோக்கும் விஸ்தாரா தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சேவையால்  அனைத்துலக விமானச்சீட்டுக் கட்டணங்கள்மீது இந்தியா கொடுத்துவரும் நெருக்குதலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்தியதை அடுத்து இந்தியாவிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான விமானச்சீட்டுக் கட்டணங்கள் 32 விழுக்காடு வரை உயர்ந்திருந்தன. புதிய சேவையால் விமானச்சீட்டுக் கட்டணங்கள் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.