அமைச்சர் சண்முகம்: சிங்கப்பூரர்கள் யாரை நம்புவர்?

பொருளியல் நிச்சயமின்மை நிலவும் சூழலில் சிங்கப்பூரை வழிநடத்திச் செல்ல யாரை நம்புவது என்ற கேள்வி வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கு எழும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் புளூம்பர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றின்போது தெரிவித்தார். பொருளியல் வளர்ச்சியின் மெதுவடைவை  சிங்கப்பூர் எதிர்பாராதவிதமாக இன்று அறிவித்துள்ள நிலையில், வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மீதும் அதன் பொருளியல் தாக்கத்தின் மீதும் சிங்கப்பூரர்கள் ஆக அதிகமாக அக்கறை கொள்வதாகத் திரு சண்முகம் இவ்வாரம் தெரிவித்தார். 

2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் சிங்கப்பூரில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

“அமெரிக்கா, சீனா ஆகியன தொடர்பான செய்திகளை மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். நாம் பாதிக்கப்படலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்,” என்று திரு சண்முகம் தெரிவித்தார். புதிய சூழலைக் கண்டறியும் இளையர்கள் பொருளியலைப் பற்றியும் கேள்வி கேட்பதால், மதிப்பையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதும்  மக்கள் யாரை நம்புகின்றனர் என்பதும் முக்கியம் என அவர் கூறினார்.

மூப்படையும் சிங்கப்பூர் சமுதாயத்தில் சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வுகாலத்திற்கான போதிய நிதி இருப்பு ஆகிய விவகாரங்களும் முக்கியம் என்று திரு சண்முகம் பேட்டியின்போது கூறினார்.பொதுத்தேர்தல் இவ்வாண்டு நடைபெறலாம் என்று சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங், கடந்தாண்டு ‘புளூம்பர்க்’கிற்கு அளித்த பேட்டி ஒன்றின்போது கோடிகாட்டினார்.