சென்னை: சென்னை குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் வந்துள்ளது.
50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரயில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை வில்லிவாக்கத்துக்கு வந்து சேர்ந்தது.
சென்னை மக்களின் தாகம் தீர்க்க வந்த முதல் குடிநீர் ரயில் என்பதால் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தத் தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். "இனி தினமும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும். ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீரைக் கொண்டுவர வேலூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவர்களின் தேவைக்குப் போக மீதமுள்ள நீர்தான் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது," என வேலுமணி தெரிவித்தார்.

