அடகுக் கடையில் கொள்ளை முயற்சி

அடகுக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஆடவர் ஒருவர் தமது கையில் இருந்த ஆயுதம் இரண்டாக உடைந்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார்.

பிடோக்கில் நேற்று முன்தினம் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை போலிஸ் தேடுகிறது. 

ஆயுதம் தாங்கிய கொள்ளை முயற்சி சம்பவத்தின் விசாரணைக்கு உதவி கேட்டு ஆடவரின் இரு புகைப்படங் களையும் போலிஸ் வெளியிட்டுள்ளது.

புளோக் 213 பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் உள்ள வேல்யூமேக்ஸ் அடகுக்கடைக்குள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் முகமூடி அணிந்த ஆடவர் கையில் வெட்டுக்கத்தியுடன் நுழைந்தார். 

ஆயுதத்தை சுழற்றியவாறு நகைகளின் காட்சிப்பெட்டி கண்ணாடியை ஆயுதத்தால் தாக்கினார். அந்தக் கண்ணாடிப்பெட்டியில் கீறல்கள் மட்டுமே விழுந்தன; உடையவில்லை.

மாறாக, அவரது வெட்டுக்கத்தி இரு துண்டுகளாக உடைந்து விழுந்தது. திட்டம் பலிக்காததால் உடைந்த ஆயுதத் துண்டுகளைப் பொறுக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அந்த ஆடவர் நாற்பதுகளின் வயதுடையவர் போலத் தோன்றியதாக சூ யோங் சோங், 66, என்னும் கடை ஊழியர் கூறினார்.

சந்தேக நபர் பற்றிய தகவல்களை போலிசின் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணிலோ www.police.gov.sg/iwitness என்னும் இணையத்தளம் வழியாகவோ அளிக்கலாம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் பூன் லே எம்ஆர்டி நிலையத்தில் உள்ள வேல்யூமேக்ஸ் அடகுக் கடையில் பங்ளாதேஷ் ஆடவர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். 

வெடிகுண்டு என்று கூறி கடைக்குள் ஒரு பொருளை வீசிய ஷேக் முகமது ரஸான், 29, எனப்படும் அந்த ஆடவரும் கொள்ளை முயற்சியில் தோற்றார். 

ஐந்து நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அவர் மீது ஆயுதம் தாங்கிய கொள்ளை குற்றம் சுமத்தப்பட்டது.