சிகிச்சை தொடர்பான தம்பதியரின் கருத்துகளுக்கு சுகாதார அமைச்சு, மசேநி கழகம் விளக்கம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மனைவி தனியார் மருத்துவமனையை நாடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஆடவர் ஒருவர் தெரிவித்த தகவலை சுகாதார அமைச்சும் மத்திய சேம நிதிக் கழகமும் மறுத்துள்ளன.

மேலும், ஜூலை 7ஆம் தேதி வெளியான யூடியூப் காணொளியில் தவறான தகவல் வெளியிடப்பட்டதால் அதுகுறித்து விளக்க இவ்விரண்டு அமைப்புகளும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

கருப்பைவாய் புற்றுநோய் சிகிச்கைக்காக தங்களது நிதியிருப்பு கரைந்துவிட்டதாக திருவாட்டி சரோஜினி ஜெயபால், 47,  திரு சூரிய தாஸ் இருவரும் அந்த காணொளியில் தெரிவித்திருந்தனர்.

திருவாட்டி சரோஜினி தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது கணவர் திரு சூரியா மத்திய சேம நிதியில் உள்ள சேமிப்பை தமது மனைவியின் மருத்துவச் சேமிப்புக் கணக்கிற்கு மாற்ற அனுமதி கேட்டபோது மசேநி கழகம் அதனை மறுத்துவிட்டதாக காணொளியில் அவர் கூறி இருந்தார். 

தமது சாதாரணக் கணக்கு, சிறப்புக் கணக்கு சேமிப்புகளை தமது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்த தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

என் மனைவிதான் எனக்கு எல்லாம். அவர் பாதிப்பில் இருக்கும்போது இந்த சேமிப்புகள் எதற்காக? என்று திரு சூரியா கேள்வி எழுப்பி இருந்தார்.

எனவே நிதித் தேவைக்காக லேவாதேவிக்காரர்களையும் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் நாடியதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் அவரது மனைவி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்றும் அதுகுறித்துப் பேச அந்த மருத்துவமனை தயாராக இருந்தது என்றும் அமைச்சும் கழகமும் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. 

தனியார் மருத்துவமனைக்கு அரசாங்க உதவி பொருந்தாது என்றும் அவை குறிப்பிட்டிருந்தன.

இருந்தபோதிலும் மெடிஷீல்ட் லைஃப், சுகாதாரக் காப்புறுதி போன்றவை மூலம் திருவாட்டி சரோஜினிக்கு $300,000 வழங்கப்பட்டு இருப்பதாகவும் பார்க்வே புற்றுநோய் சிகிச்சை நிலையம், மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை  ஆகியவற்றின் மருத்துவக் கட்டணங்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்குச் சமமானது இந்தத் தொகை என்றும் கூட்டறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர, அரசாங்கத் திட்டங்களின்கீழ் 2017 அக்டோபர் முதல் அவர் மாதம் $1,100 பெற்று வருகிறார் என்றும் அத்தொகை அவரது நிதிச்சுமையைக் குறைத்திருக்கும் என்றும் அறிக்கை கூறியது. 

மேலும், சிகிச்சைக்காக தம்பதியரின் மருத்துவ சேமிப்புக் கணக்கில் இருந்து சுமார் $9,000 பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி