போதைப்பொருள் புழங்கிகளுக்காக இரண்டாவது மறுஒருங்கிணைப்பு நிலையம்

போதைப்பொருள் புழங்கிகள் அப்பழக்கத்தை விட்டொழிப்பதற்காக சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம் (சானா), அதன் இரண்டாவது மறுஒருங்கிணைப்பு நிலையத்தைத் தொடங்கியுள்ளது. 

'சானா'வின் முதல் நிலையம் செங்காங்கில் 2016ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1,500 பேருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் செங்காங் நிலையம் பெரும் உதவியை வழங்கி வந்தது. 

அந்த வெற்றியைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தாமான் ஜூரோங்கில் செயல்பட்டு வந்த சானாவின் இரண்டாவது  நிலையம்,  நேற்று அதிகாரபூர்வமாகத் திறப்பு விழா கண்டது.

'சானா'வின் இதுபோன்ற நிலையங்கள், மறுஒருங்கிணைப்புத் திட்டங்களையும் சேவைகளையும் வழங்கி வருகின்றன. முன்னாள் போதைப்பொருள் புழங்கிகள், போதைப்பொருள் புழங்கி ஆகும் அபாயத்தில் உள்ளோர், அவர்களின் குடும்பத்தார் ஆகியோர் இத்திட்டங்கள் மூலம் பலனடைந்து வருகின்றனர். 

நிலையத்தின் முழுநேர ஆலோசகர்களும் தொண்டூழியம் புரியும் ஆலோசகர்களும் வழங்கும் சேவைகளில் போதைப்பொருள் புழங்கிகளுக்கான ஆலோசனை நிகழ்ச்சி, நிதி மற்றும் வேலைவாய்ப்புக்கான உதவி போன்றவை அடங்கும்.

நிலையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இலவசம். உடலில் பச்சைக் குத்தியிருந்தால் மட்டுமே அதை அகற்றுவதற்கு ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

ஆனால் அதிலும் அதிகக் கழிவு தரப்படுகிறது.

'சானா'விடம் உதவி நாடி வருவோரில் பெரும்பாலோர் தீவின் மேற்கு, வடக்குப் பகுதிகளில் இருப்பவர்கள் என்பதால் இரண்டாவது மறுஒருங்கிணைப்பு நிலையத்தை அமைக்க தாமான் ஜூரோங் வட்டாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதுவரை இரண்டாவது நிலையத்திற்கு 89 பேர் உதவி நாடி வந்துள்ளனர் என்றும் அவர்களில் 32 பேர் இளையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

போதைப்பொருள் புழங்கிகளின் உறவினர்கள் கிட்டத்தட்ட 11 பேரும் உதவி பெறுவதற்காக வந்திருப்பதாகக் கூறப்பட்டது. 

முன்னாள் போதைப்பொருள் புழங்கிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இப்புதிய நிலையம் உதவிக்கரம் நீட்டும் ஒரு சிறந்த தளமானது. 

நிலையம் அமைந்துள்ள அதன் இடத்தால் மட்டுமல்லாமல் மாலையில் அது இயங்கும் நேரத்தாலும் உதவி பெற எளிதாக இருக்கும்.  

உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின் நேற்று திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிலையத்தின் வசதிகளைப் பார்வையிட்டார். 

அதைத் தொடர்ந்து 'சானா'வின் உதவி பெற்று வருவோரும் அவர்களின் குடும்பத்தாரும் சேர்ந்து 'ஃபுட்சால்' விளையாடும் போட்டி ஒன்றையும் திரு அம்ரின் தொடங்கி வைத்தார்.