‘லாப்ஸ்டர்’ குஞ்சுகளை வாங்க கடத்தலில் ஈடுபட்ட சிங்கப்பூரர் கைது

'லாப்ஸ்டர்' எனப்படும் ஒருவகை பெருங்கடல் நண்டின் குஞ்சுகளைக் கடத்த முயன்றதன் தொடர்பில் 29 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிட்டத்தட்ட 113,412 'லாப்ஸ்டர்' குஞ்சுகளை இந்தோனீசியாவிலிருந்து வியட்னாமுக்கு சிங்கப்பூர் வழியாகக் கடத்த முயன்ற நால்வரில் இவரும் ஒருவர். கடத்தப்பட்ட 'லாப்ஸ்டர்' குஞ்சுகளின் மதிப்பு கிட்டத்தட்ட 17 பில்லியன் ரூப்பியா (S$1,650,139) என்று இந்தோனீசிய போலிசின் மக்கள் தொடர்புப் பிரிவு தன் ஃபேஸ்புக்வழி கூறியிருந்தது. 

நால்வரும் இம்மாதம் மூன்றாம் தேதியன்று இந்தோனீசிய போலிசாரிடம் சிக்கினர்.

அவர்கள் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர். 

ஜூலை முதல் தேதியன்று கடத்தல் குறித்துத் தகவல் அறிந்ததை அடுத்து போலிசின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள், ஜாம்பி என்ற இடத்திற்குச் சென்றனர். ஜாம்பியின் மீன் தடைக்காப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து அதிகாரிகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பாதையைக் கண்காணித்து வந்தனர்.

அப்போது 44, 50 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் 'லாப்ஸ்டர்' குஞ்சுகளை இரு சிறிய பேருந்துகள்வழி கொண்டு சென்றபோது போலிசார் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இருவரையும் மேலும் விசாரித்ததில் சிங்கப்பூரர் உட்பட இருவர் கைதாகினர். கைதான சிங்கப்பூரர் 'லாப்ஸ்டர்' குஞ்சுகளை வாங்க விரும்பியவர் என்றும் மற்ற மூவரும் அதற்குத் இடைத்தரகர்களாக இருந்தனர் என்றும் நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1.5 பில்லியன் ரூப்பியா (S$145,600.50) அபராதமும் விதிக்கப்படலாம்.