ரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

பிரான்ஸின் தலைநகர் பாரிசில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் முனைப்பகுதியிலும்  இறக்கைப்பகுதியிலும் ரத்தக் கறை படிந்திருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. 311 பயணிகளைக் கொண்டு சென்ற ‘எஸ்கியூ 336’ விமானம் சில பறவைகளை இடித்ததால் இவ்வாறு நேர்ந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

விமானத்தைத் தரையிறக்குவதற்கான சக்கரப் பகுதிக்குள் மாண்டுபோன பறவைகள் சிக்கியிருப்பதை வேறு சில படங்கள் காண்பித்தன. இந்தச் சம்பவத்தால் சுமார் 45 நிமிட சேவை தாமதம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். “தரையில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கும் சுத்தம் செய்யும் பணிகளுக்கும் பிறகு விமானம் சேவைக்குத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குத் திரும்பி வரும் எஸ்கியூ 335 சேவைக்கு அதே விமானம் பயன்படுத்தப்பட்டது,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.