ஆபரணங்கள், பேனாக்கள், இரண்டு கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவை ஈசூனிலுள்ள அடுக்குமாடி வீடு ஒன்றிலிருந்து திருடப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு 13,000 வெள்ளி.
ஈசூன் அவென்யூ 6ல் நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு போலிசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதன் தொடர்பில், உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 58 வயது ஆடவரை புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் கைது செய்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், திருட்டு ஆகியவற்றின் தொடர்பில் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டு முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இத்தகைய சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்களது வீட்டுச்சாவிகளைக் கவனிப்பின்றி விட்டுவைக்கவேண்டாம் என்று போலிசார் ஆலோசனை கூறியுள்ளனர். வீட்டின் எல்லா கதவுகள், சன்னல்கள் மற்றும் இதர துவாரங்கள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே வீட்டைவிட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

