குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒட்டுமொத்த பொதுத்துறையும் இனி பொதுவானதோர் இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பிற்கு இணங்கி நடக்க வேண்டும். சென்ற ஆண்டில் பல தரவுக்கசிவுச் சம்பவங்கள் இடம் பெற்றதை அடுத்து, முதற்கட்டமாக 13 புதிய நடவடிக்கைகளை பொதுத் துறை நடைமுறைப் படுத்த வேண்டும்.
தவறான நோக்கத்துடன் தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய முயன்றாலோ, வழக்கத்திற்கு மாறான தரவுப் பரிமாற்றங்கள் இருப்பதைக் கண்டறிந்தாலோ, பயனாளர்கள் தரவுத்தளங்களைக் கையாளும் உரிமையைக் கட்டுப்படுத்த அந்தத் தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் இலக்கு கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒருவரின் எச்ஐவி நிலை போன்ற அதிமுக்கிய தகவல்களும் முக்கியமான கோப்புகளும் குறிமுறையாக்கம் செய்யப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனியாக ஒரு கணினியில் மறைத்து வைக்கப்பட வேண்டும். அதேபோல, அமைச்சர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய கணினிகளில் சேமித்து வைக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் லீ சியன் லூங் அமைத்த புதிய பொதுத் துறை தரவுப் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு, முதலாவதாக இந்தத் தொழில்நுட்பரீதியான நடவடிக்கைகளை நேற்று அறிவித்தது. இங்குள்ள ஐந்து முக்கிய அரசாங்க அமைப்புகளில் குடிமக்களின் மருத்துவம், நிதி சார்ந்த தரவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது ஆராயப்பட்டது. பாதுகாப்பான மின்னிலக்க எதிர்காலத்திற்கு சிங்கப்பூரை ஆயத்தப்படுத்தும் விதமாக, தரவுப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் பொதுத் துறை ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல், சேவை வழங்கும் வெளிநிறுவனங்களைச் சிறந்த முறையில் நிர்வகிக்கும் வழிகள் உட்பட இன்னும் பல அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் பல தரவுக்கசிவு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து பொதுத் துறை தரவுப் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆகக் கடைசியாக, ரத்த நன்கொடையாளர்கள் 800,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் சட்டவிரோதமாகப் பெறப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேலாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்திற்கு, சுகாதார அறிவியல் ஆணையத்திற்குத் தொழில்நுட்பச் சேவை வழங்கிய 'செக்யூர் சொல்யூஷன்ஸ் குரூப்' என்ற நிறுவனமே பொறுப்பு எனக் கூறப்பட்டது.
எச்ஐவி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 14,200 பேரின் தனிப்பட்ட, ரகசிய விவரங்களை சிங்கப்பூரில் வசித்த அமெரிக்கர் ஒருவர் இணையத்தில் கசியவிட்ட தகவலை சுகாதார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. சுகாதார அமைச்சின்கீழ் வரும் தேசிய சுகாதாரப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் லெர் டெக் சியாங் மூலமாக அந்த விவரங்களை அந்த அமெரிக்கர் பெற்றதாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 'சாஸ்' எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டைக்காக விண்ணப்பித்த அல்லது புதுப்பிக்கக்கோரி விண்ணப்பித்த 7,700 பேருக்குத் துல்லியமற்ற சுகாதாரப் பராமரிப்பு மானியங்கள் வழங்கப்பட்டன. இந்தத் தவற்றுக்கு கணினிக் கோளாறே காரணம் என்று சுகாதார அமைச்சு கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது. சிங்கப்பூரின் ஆக மோசமான இணையத் தாக்குதல் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழ்ந்தது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான சிங்ஹெல்த் தரவுத்தளம் ஊடுருவப்பட்டு, 1.5 மில்லியன் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களையும் பிரதமர் லீ உட்பட 160,000 பேரின் வெளிநோயாளி மருந்துச் சீட்டுத் தகவல்களையும் இணைய ஊடுருவிகள் களவாடினர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக்கியமான, ரகசியமான தகவல்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் வகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 13 நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தொற்றுநோய் பாதிப்புடைய நோயாளிகள், நொடித்துப்போனவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய தரவுத்தளங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

