தற்காப்புப் படைத் தலைவருக்கு புருணையின் ஆக உயரிய விருது

தற்காப்புப் படைத் தலைவருக்கு புருணையின் ஆக உயரிய விருது

2 mins read
7de0cf04-efe2-4c78-8558-5756d7999b98
சுல்தான் ஹசனல் போல்கியா (வலது) சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் மெல்வின் ஓங்குக்கு விருது வழங்குகிறார். படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைவரான லெஃப்டினண்ட் ஜெனரல் மெல்வின் ஓங்குக்கு புருணையின் ஆக உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஓங்குக்கு 'படுக்கா கெப்ரானியான் லைலா தெர்பிலாங்' முதல் வகுப்பு விருதை நேற்று வழங்கினார் புருணை சுல்தான் ஹசனல் போல்கியா.

இது வெளிநாட்டு ஆயுதப்படைத் தலைவர்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய விருதாகும் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இந்த விருது சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே நீண்டகால மாக நிலவிவரும் அணுக்கமான, இருதரப்பு தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அமைச்சு கூறியது.

இவ்விருதை புருணையின் நூருல் இமான் அரண்மனையில் பெற்றுக்கொண்ட 44 வயது ஜெனரல் ஓங், "இந்த விருது சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கும் அரச புருணை ஆயுதப்படைகளுக்கும் இடையே உள்ள சிறப்பு உறவைப் பிரதிபலிக்கிறது," என்றார்.

இன்று வரை புருணையில் தங்கி இருக்கும் லெஃப்டினண்ட் ஜெனரல் ஓங், சுல்தான் போல்கியாவைக் கௌரவிக்கும் அரச விருந்தில்

கலந்துகொள்வார்.

இந்த விருதை இதற்கு முன் பெற்றவர்கள் சிங்கப்பூர் தற்காப்புப் படையின் முன்னாள் தலைவர்க ளான திரு பெர்ரி லிம், திரு இங் சீ மெங், திரு நியோ கியான் ஹோங், திரு பே சூ கியாங்.

உயர்மட்ட வருகைகள், இரு நாட்டுப் பயிற்சிகளின் பரிமாற்றம், நிபுணத்துவ பரிமாற்றங்கள் போன்ற பற்பல நடவடிக்கைகளில் இரு நாடுகளின் ஆயுதப்படைகள் அடிக்கடி சந்தித்து கலந்துறவாடி இருக்கின்றன.

ஆயுதப்படைகளின் ராணுவம், ஆகாயப்படை, கடற்படை ஆகிய முப்பிரிவுகளும் பங்குகொள்ளும் 'மாஜு பெர்சாமா', 'ஏர் கார்ட்', ' பெலிகன்' ஆகிய இருதரப்புப் பயிற்சிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இப்படிப்பட்ட கலந்துறவாடல்கள் பரஸ்பர புரிந்துணர்வு, மேற்பட்ட இயங்குதன்மை, படை

வீரர்களிடையே வலுவான நட்புணர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை இரு நாட்டு ஆயுதப் படைகளிடையே செழித்தோங்கி வளரச் செய்துள்ளது என்றும் தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறியது.