கடன் பெறுவதிலிருந்து பணிப்பெண்களுக்கு முதலாளிகள் தடை விதிக்க முடியும்

இல்லப் பணிப்பெண்கள் உட்பட வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரின் முதலாளிகள், அவர்களின் அனுமதியுடன் உரிமம் பெற்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்க விண்ணப்பிக்க முடியும். தனக்குத் தானே தடை உத்தரவை நடைமுறைப்படுத்திக்கொள்ளும் வசதி நேற்று முதல் நடப்புக்கு வந்தது. அவர்கள் சிங்கப்பூர் கடன்கொடுப்போர் இலக்காவின் இணையத்தளத்தின் மூலம் இதை செய்துகொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள் ஆகியோருக்குக் கடன் வழங்குவதை இந்தக் கட்டமைப்பு தடுக்கும்.மூன்றாம் தரப்பினரான இல்லப் பணிப்பெண்களின் முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் அனுமதியுடன் கடன்பெறுவதிலிருந்து தடை விதிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்ட அமைச்சு நேற்று விளக்கமளித்தது. உரிமம் பெற்ற கடன்கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டு வருவதால், இந்தக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அமைச்சு கூறியது. 

இவ்வாண்டின் முற்பாதியில் 53,000 வெளிநாட்டினர் உரிமம்  பெற்ற கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றனர். கடந்த ஆண்டு முழுமைக்குமான கடன் பெற்றோர் எண்ணிக்கை 55,000. 2017ல் அந்த எண்ணிக்கை 19,000. 2016ல் அது 7,500 ஆக இருந்தது. மற்றொரு மாற்றமும் இன்று முதல் அறிமுகம் ஆகின்றது. கடன்கொடுப்போர் திருத்தச் சட்டம் 2018ன்படி, ஆண்டுக்கு 10,000க்கும் குறைவான ஊதியம் பெறும் வெளிநாட்டினர் உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடமிருந்து $1,500தான் கடன் பெற முடியும் என்று இருந்தது. அந்தத் தொகை இன்று முதல் $500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று முதல் உரிமம் பெற்ற 158 கடன் நிறுவனங்கள், கடன் பெறுவோருக்கு உத்தரவாதம் கொடுக்க வெளிநாட்டினரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சு நேற்று தெரிவித்தது.