கொலை செய்துவிட்டு 30 ஆண்டுகளாக தலைமறைவாய் இருந்த மலேசியருக்கு எட்டரை ஆண்டு சிறை

கொலை செய்துவிட்டு 30 ஆண்டுகளாக தலைமறைவாய் இருந்த மலேசியருக்கு எட்டரை ஆண்டு சிறை

2 mins read

தற்காலிக வேலை செய்த மலேசியர் ஒருவர் தம்முடன் வேலை செய்த சக ஊழியரை $1,000 பணத்துக்காக 1986ஆம் ஆண்டில் கொலை செய்துவிட்டு சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்ற திரு ஆறுமுகம் வீராசாமி அதன் பின் சில முறை சிங்கப்பூருக்குத் திரும்பி வந்துள்ளார்.

அப்போதும் அவர் போலிசின் பிடியில் சிக்கவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு 2006ஆம் ஆண்டில் அவர் ஒரு பீர் போத்தலில் விட்டுச் சென்ற கைரேகையை வைத்து மற்றொரு குற்றச்செயலைப் புலனாய்வு செய்தபோது, ஆறுமுகத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

2016ஆம் ஆண்டில் உட்லட்ண்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது, ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

அவரது வேலை அனுமதிச் சீட்டில் ஆறுமுகத்தின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், போலிஸ் கைது ஆணையிலும் அவ்வாறே இடம்பெற்றிருந்தது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இப்போது 61 வயது தாத்தா வான திரு ஆறுமுகத்துக்கு, நோக்கமில்லா மரணத்தை விளைவித்த குற்றத்துக்காக நேற்று எட்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1986ஆம் ஆண்டில் ஆறுமு கத்துக்கு 28 வயதாக இருந்தது. அப்போது அவர் 43 வயதான மற்றொரு மலேசியரான முத்தையா குதலிங்கத்தைக் கொலை செய்தார்.

கட்டுமான ஊழியராக வேலை செய்த முத்தையா அன்றைய தினம் ஆறுமுகத்துக்குக் கூலியாக $45 கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அவர் $10 மட்டுமே கொடுத்ததால் வாக்குவாதம் முற்றியது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகலில் பணம் குறித்து பேச ஆறுமுகம், முத்தையா தங்கி இருந்த இடத்துக்குச் சென்று முறையிட்டார்.

பின்னர் இருவருக்குமிடையே நிகழ்ந்த கைகலப்பில் ஆறுமுகம் ஒரு சுத்தியலால் முத்தையாவின் தலையிலும் நெஞ்சிலும் சரமாரியாகத் தாக்கினார்.

பின்னர் டாக்சி மூலம் உட்லண்ட்சுக்குச் சென்று கடற்பாலம் வழியாக ஜோகூர் பாருவுக்குள் நுழைந்து தலைமறைவானார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.