சுடச் சுடச் செய்திகள்

(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்

டாக்சி கட்டணத்தைக் கட்ட இயலாத பெண் பயணி ஒருவரைக் காணொளி எடுத்து அவமானப்படுத்திய கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்த டாக்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தக் காணொளியை வாசகர்கள் சிலர் ‘ஸ்டாம்ப்’ தளத்திற்கு அனுப்பியுள்ளனர். டாக்சி ஓட்டுநர் அந்தப் பெண்ணை ஏளனப்படுத்தியதைக் காணொளி காட்டுகிறது.

டாக்சி கட்டணத்தைக் கட்ட முடியாமல் இருந்தது பெண்ணின் தவறு என்றாலும் அவரை அந்த ஓட்டுநர் இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம் என்று இணையவாசிகள் பலர் ஃபேஸ்புக்கில் குறைகூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கம்ஃபர்ட் டெல்குரோ விசாரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் குழுமத் தலைமை வர்த்தகத் தொடர்பு அதிகாரி திருவாட்டி டெம்மி டான் ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் தெரிவித்தார்.

“சம்பவத்தை ஓட்டுநர் கையாண்ட விதம் ஏற்புடையதல்ல. எனவே அவரது வேலை ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்திருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

“போதையில் இருக்கும் பயணிகளையும் கட்டணம் கட்டாமல் இருக்கும் பயணிகளையும் எதிர்நோக்கும் எங்கள் டாக்சி ஓட்டுநர்கள், விவகாரத்தைச் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளாமல் போலிசாரிடமிருந்தும் நிறுவனத்திடமிருந்தும் உதவி நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று திருவாட்டி டெம்மி கூறினார்.