சுடச் சுடச் செய்திகள்

அமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்

ஆந்திரப் பிரதேசத்தின் மாநில அரசாங்கம், அங்குள்ள அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் பரிசீலித்து செலவுகளைக் குறைக்க முற்படும் வேளையில், சிங்கப்பூரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அமராவதி நகர மேம்பாட்டுத் திட்டத்தில் தற்போது நிச்சயமின்மை நிலவுகிறது.

தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்த ஆந்திராவின் புதிய முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி, அமராவதி திட்டத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மாநில வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னைய மாநில அரசு, கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அமராவதி திட்டத்திற்கு 10 பில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தது. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமையவிருந்த அமராவதிக்கான கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும் இன்னும் தொடக்கக்கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமராவதி  நகரை மற்றொரு சிங்கப்பூராக்க உறுதி செய்திருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து சிங்கப்பூருடன் கூட்டு முயற்சிகளை  மும்முரமாக மேற்கொண்டார். ஆயினும், இந்தப் பிரம்மாண்ட திட்டத்தின் செயலாக்கத்தைத் திரு ரெட்டி குறைகூறி வருகிறார்.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தையும் அமராவதியின் விஜயவாடா விமான நிலையத்தையும் வாரத்திற்கு இருமுறை இணைக்கும் விமானப் பயணங்களுக்கான ஏற்பாட்டைத் தொடரவும் புதிய மாநில அரசாங்கம் மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஏற்பாடு கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.