ஈசூன் மற்றும் புக்கிட் தீமா வட்டாரங்களின் குடியிருப்பாளர்கள், தங்கள் அஞ்சல்காரர்கள் யார் என்பதை இன்று முதல் தெரிந்துகொள்வர். 'சிங்போஸ்ட்' அஞ்சலக நிறுவனத்தின் புதிய தளம் மூலம் வாடிக்கையாளர்கள் அந்த அஞ்சல்காரர்களை மதிப்பீடு செய்யலாம். அஞ்சல் விநியோக சேவைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் தபால் பெட்டிகள் தொடர்பான பிரச்சினைகளை இன்னும் விரைவாகக் கையாள்வதற்காகவும் 'சிங்போஸ்ட் ' இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது.
58, 59, 65, 76 ஆகிய எண்களில் தொடங்கும் அஞ்சல் குறியீடுகள் உள்ள வட்டாரங்களின் குடியிருப்பாளர்கள் 'மைபோஸ்ட்மென்.எஸ்ஜி' என்ற இணையத்தளத்தில் தங்களது வட்டாரக் குறியீடுகளை உள்ளிட்டு அஞ்சல்காரர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று 'சிங்போஸ்ட்' செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தெரிவித்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அஞ்சல்களை விநியோகித்த அஞ்சல்காரர்களின் சேவைத்தரத்தைப் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்வதுடன் அவர்களுக்கு மதிப்பீட்டுப் புள்ளிகளையும் வழங்கலாம். வாடிக்கையாளர்களின் கருத்துகள் அஞ்சல்காரர்களிடம் பகிரப்படும்.
இந்தச் சேவை வரும் அக்டோபர் மாதம் முதல் தீவு முழுவதிலும் அறிமுகம் செய்யப்படும்.
அண்மையில் நிகழ்ந்த சில சேவைத் தடங்கல்களை அடுத்து 'மைபோஸ்ட்மென்' இயக்கம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அஞ்சல் சேவை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே இந்த இயக்கத்தின் நோக்கம். புதிய பின்தொடரக்கூடிய தபால் பெட்டி அஞ்சல் பொருளின் துவக்கம், அஞ்சல்காரர்களின் பணிகளில் நிபுணத்துவத்தை ஏற்படுத்துதல் ஆகியவை இயக்கத்தின் புதிய நடவடிக்கைகளில் சில.

