முதுமைக்கால மறதி நோயாளிகளுக்கான புதிய இல்லப் பராமரிப்பு சமூகத்தைச் சோதனை செய்ய நகர மறுசீரமைப்பு வாரியம், சுகாதார அமைச்சின் சார்பில், கிப்ரல்டார் கிரசண்ட் வட்டாரத்திலுள்ள நிலப்பகுதியைப் பொது ஏலக்குத்தகை மூலமாக விற்பனைக்கு விடுகிறது. 30 ஆண்டு குத்தகைக்காலத்தைக் கொண்டுள்ள இந்த நிலப்பகுதி, செம்பவாங் பூங்காவுக்கு அருகே அமைந்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான பத்து பங்களாக்கள் உள்ள இரண்டு நிலங்கள் இதில் உள்ளடங்கும். இரண்டு நிலங்களில் பெரிதான நிலம் 26,350.7 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மற்றொரு நிலத்தின் பரப்பளவு 1,756 சதுர மீட்டர்.
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மொத்த தரை பரப்பளவு 9,170 சதுர மீட்டர். தற்போதுள்ள 10 கட்டடங்களின் நீட்டிப்புகளுக்காகக் கூடுதலாக 900 சதுர மீட்டர் பரப்பளவு அனுமதிக்கப்படுகிறது.
ஏலக் குத்தகை இவ்வாண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி முடிவடையும். இந்தப் பராமரிப்பு 'கிராமம்', முதுமைக்கால மறதி நோயாளிகளுக்குப் பாதுகாப்பான வீட்டுச் சூழலைத் தரும் விதமாக அமைக்கப்படும் என்றது நகர மறுசீரமைப்பு வாரியம். இங்கு தங்குவோருக்கு இடையில் கலந்துறவாடல்களையும் அர்த்தமுள்ள பங்களிப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில் "கிராமம்" அமைக்கப்படும்.

