இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை 2.3 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காட்டுக்கு அனைத்துலகப் பணநிதியம் குறைத்துள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 0.1%தான் வளர்ச்சி கண்டது. அது கடந்த பத்தாண்டுகளில் ஆகக் குறைவு. இது பொருளியல் மந்தநிலை மற்றும் நாணயக் கொள்கை தளர்ச்சி ஆகியவற்றுக்கு இட்டுச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"உலக அளவில் வர்த்தகப் பதற்றம் நிலவி வரும் வேளையில், வெளிப்புற துறைகளிலிருந்து கிடைத்துவரும் ஆதரவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொருளியல் வளர்ச்சி உள்நாட்டுத் தேவைகளைப் பொறுத்தே அமையும்," என்று பணநிதியம் நேற்று கூறியது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, மிதமான பருவத்துக்குப் பிறகு 2.5 விழுக்காட்டுக்கு நிலைப்படலாம் என்று குறிப்பிட்ட பணநிதியம், மே மாதம் 14ஆம் தேதியோடு முடிவடைந்த சிங்கப்பூர் அதிகாரிகளுடனான பேச்சுகளுக்குப் பிறகு இந்த முன்னுரைப்பு இடம்பெற்றுள்ளது என்றும் சொன்னது.
இதற்கிடையே, நிதித்துறை மீதான சிங்கப்பூரின் கண்காணிப்பு உலகிலேயே தலைசிறந்தவற்றுள் ஒன்று என்றும் அனைத்துலகப் பணநிதியம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளியல் அடிப்படை அம்சங்கள் வலுவாக உள்ளன என்றும் பொருளியல் கொள்கைகள் நல்ல நிலையில் இருப்பதாகவும் பணநிதியம் கூறியது.
2013ஆம் ஆண்டில் மேற்கொண்ட மறுஆய்வுக்குப் பிறகு, சிங்கப்பூர் பற்றிய மூன்றாவது நிதித்துறை மதிப்பீடு முடிவடைந்திருக்கும் வேளையில், மோசமான பொருளியல் அதிர்ச்சிகளைச் சமாளிக்கும் வலுவான தாக்குப்பிடிக்கும் செயல்பாடுகளை சிங்கப்பூர் கொண்டுள்ளது என்றும் பணநிதியம் கூறியதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று தெரிவித்தது.
நிதித் தொழில்நுட்பம் மற்றும் மேற்பார்வையை எடுத்துக்கொண்டால், அனைத்துலக பணநிதியமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் நிதி நிலைத்தன்மையைக் கட்டிக்காக்கும் அதே வேளையில் நிதிப் புத்தாக்கத்தையும் பிரபலப்படுத்துவதிலும் சரிசமமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
பணநிதியத்தின் முடிவுகளை வரவேற்ற சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன், "நிதித்துறை மதிப்பீடு என்பது ஒரு கடினமான மதிப்பீட்டு முறை. அதில் சிங்கப்பூரின் நிதிக் கொள்கைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

