ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நீ ஆன் சிட்டி கடைத்தொகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சில மாடிகள் உயரத்திலிருந்து கீழே விழுந்து மாண்டவர் ஓர் அமெரிக்கக் குடிமகன் என்று சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
"சிங்கப்பூரில் அமெரிக்கக் குடிமகன் ஒருவரின் மரணத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். அமெரிக்கக் குடிமகன் ஒருவர் வெளிநாட்டில் மரணமடையும்போது, அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்யும். இந்தச் சோகமான தருணத்தில் மாண்டவரின் குடும்பத்தின் தனிமைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் மேலும் கருத்து கூற இயலாது," என்று தூதரகப் பேச்சாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கடைத் தொகுதிக்குள்
35 வயது ஆடவர் ஒருவர் பல மாடிகள் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். அவரது உடல் கீழ்தளம் 2ல் தொப்பென்று விழுந்தது. டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பின் காயங்கள் காரணமாக மாண்டார்.
அந்த அமெரிக்கக் குடிமகனின் பெயர் திரு அமான் டெமோஸ் சாலமன் என்றும் அவர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து சிங்கப்பூரில் உள்ள சொத்து முதலீட்டு நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரியாக வேலை செய்து வந்தார் என்றும் அறியப்படுகிறது. அவரது குடும்பத்தினர் நேற்று பிரேதத்தை அடையாளம் காட்ட சவக்கிடங்குக்கு வந்தனர்

