அமெரிக்காவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திற்கு வெளியில் மியன்மார் நாட்டவர்கள் ஆர்ப்பாட்டம்

 சிங்கப்பூரின் அரகானிஸ் சங்கம் என்ற மியன்மார் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பப்பட்டதை எதிர்த்து மியன்மார் நாட்டவர்கள் சிலர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திற்கு வெளியில்  நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரில் மியன்மாரைச் சேர்ந்த அறுவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரின் சட்டங்களுக்குப் புறம்பான முறையில் மியன்மார் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு இங்கு ஆதரவு திரட்ட  அவர்கள் முயன்றதாக  சிங்கப்பூரின் உள்துறை அமைச்சு கடந்த புதன்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்தது. கைது செய்யப்பட்ட மியன்மார் நாட்டவர்கள், ரக்கைனைச் சேர்ந்த ‘அரக்கான் ஆர்மி’  என்ற கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. ரக்கைன் மாநிலத்தின் சுயேச்சையை அதிகரிப்பது இந்த அமைப்பின் நோக்கம்.

புதன்கிழமை பிற்பகலில் தோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரக்கான் இளையர் சங்கத்தின் ஜப்பானியப் பிரிவு தெரிவித்தது. சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட தனிநபர்கள் ’அரக்கான்  ஆர்மி’ அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்லர் என்றும் மியன்மாரில் அரக்கான் அகதிகளுக்கு அவர்கள் உதவி வருவதாகவும் அந்தச் சங்கம் கூறியது.

இது குறித்த மேல் விவரங்களுக்காக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’  பத்திரிகை வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளது.