அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிக மழை

ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் இடியுடன் கூடிய மழை இன்னும் அதிகமாகப் பெய்யும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய வட்டாரத்திலும் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசும் காற்று ஒரே இடத்தில் குவிவதால்  ஓரிரு நாட்களுக்குக் கனத்த மழை பெய்யலாம்.

சில நாட்களுக்கு முற்பகலிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டுப் பெய்யும் என்றும் கூறப்படுகிறது. ஜூலையின் மழைப்பொழிவு வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பருவமழை மேகங்கள் தென்கிழக்காசியாவின் வடக்குப் பகுதியிலும்  தென் சீனக் கடலின் வடக்குப் பகுதியிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிங்கப்பூரிலும் சுற்றுவட்டார நாடுகளிலும் வறண்ட வெப்பநிலை ஏற்படும் என்றும் அவ்வப்போது பலத்த காற்றைக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அன்றாட வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சிஸுக்கும் இடைப்பட்டிருந்தது.