ஆறு பிரபலமான தொடக்கப்பள்ளிகளுக்கு அளவு கடந்த விண்ணப்பங்கள்

ஆறு பிரபலமான தொடக்கப்பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கும் பிள்ளைகள் பள்ளியில் சேர்வதற்கு, வருடாந்திர தொடக்கப்பள்ளி ஒன்றுக்கான பதிவு நடவடிக்கையின் ஏழு கட்டங்களின் மூன்றாவது கட்டத்தில், குலுக்கல் முறைக்கு உட்பட நேரிடலாம். கட்டம் ‘2ஏ2’ பதிவு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நிறைவடைந்த நேரத்தில், கத்தோலிக் ஹை பள்ளி, நன் ஹுவா தொடக்கப்பள்ளி, நன்யாங் தொடக்கப்பள்ளி, பெய் ஹுவா பிரெஸ்பிடேரியன் தொடக்கப்பள்ளி, ரெட் சுவாஸ்திகா தொடக்கப்பள்ளி, ரோசைத் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு அளவுகடந்த விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. 

கடந்தாண்டின் இதே கட்டத்தில், 11 பள்ளிகள் காலியான இடங்களைவிட அதிக விண்ணப்பங்களைப் பெற்றிருந்தன. 

குலுக்கல் முறைக்கு உட்படுத்தப்படும் பிள்ளைகளின் பெற்றோர்கள், குலுக்கல் முடிவுகளை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) குறுந்தகவல் வழியாகத் தெரிந்துகொள்வர்.  இந்தக் குலுக்கலைக் கல்வி அமைச்சு கணினி வழியாக நடத்துகிறது.இந்தக் கட்டத்திற்குப் பிறகு கட்டம் ‘2பி’ தொடங்கவுள்ளது. பள்ளியில் தொண்டூழியர்களாக இருக்கும் பெற்றோர்கள், சமூகத் தலைவர்களாக உள்ள பெற்றோர்கள், விண்ணப்பிக்கும் பள்ளிகளுடன் தொடர்புடைய தேவாலயங்களை அல்லது  குலமரபுச் சங்கங்களைச் சார்ந்துள்ள பெற்றோர்கள் ஆகியோருக்கானது இந்தக் கட்டம்.

இந்தக் கட்டத்திற்கான விண்ணப்பம் ஜூலை 22ஆம் தேதி தொடங்கும்.