தாதிகள் தங்கள் திறன்களையும் அறிவாற்றலையும் மேம்படுத்திக் கொள்ள இரண்டு புதிய பயிற்சிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டுகள் பகுதி நேரமாகப் பயிலக்கூடிய அறிவியல் இளநிலை (தாதிமை நடைமுறை) பட்டக்கல்வி, தாதிமை உதவியாளர்களுக்கான மருந்தியல் நிர்வாக ஆற்றல் சான்றிதழ் ஆகியவையே அந்த இரண்டு புதிய பயிற்சிகள்.
சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நடைபெற்ற தாதிகள் தகுதி விருது வழங்கும் விழாவில் இந்த விவரங்களை வெளியிட்டார்.
சிங்கப்பூரின் தாதிமை ஊழியரணி 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 17 % அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கணக்குப்படி சிங்கப்பூரில் 42,000 தாதிகள் உள்ளனர்.
அதே காலக்கட்டத்தில் பணியில் சேரும் தாதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2013ல் 1,600 ஆக இருந்த புதிய தாதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 2,100க்கு உயர்ந்தது.
"நாம் நமது தாதிமை ஊழியரணியை சில வழிகளில் வளர்க்கலாம். வளரும் ஆற்றல்களிலும் திறன்களிலும் உங்களை மேம்படுத்திக்கொள்ள அதிகமான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
"உங்கள் தாதிமை வாழ்க்கைத் தொழில் முழுமைக்கும் நிபுணத்துவ மேம்பாட்டுக்கு ஊக்கமளித்தல், மாணவர்களும் வாழ்க்கைத் தொழிலில் இடைமாற்றம் செய்யும் நிபுணர்களும் தாதிமையை தங்கள் வாழ்க்கைத் தொழிலாகத் தேர்வு செய்ய உற்சாகமளித்தல் அந்த சில வழிகள்," என்றார் அமைச்சர் கான்.
தாதிமை செயல்பாட்டு பட்டக்கல்வியை தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள எலிஸ் லீ தாதிமைக் கல்வி நிலையம் வழங்கும்.
இந்தப் பகுதி நேரப் பட்டக் கல்வி முதன் முதலில் ஒரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றில் தாதிமைத் துறையில் பட்டயம் பெற்று, ஓராண்டு பணி அனுபவம் உள்ள பதிவு செய்யப்பட்ட தாதிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் இந்தப் பட்டக்கல்வியில் சேர்ந்துகொள்ளலாம்.
தாதிமை உதவியாளர்களுக்கான மருந்தியல் நிர்வாக ஆற்றல் சான்றிதழ் அவர்களுக்கு மருந்துகள் பற்றிய அறிவாற்றலைக் கொடுக்கும்.
பதிவு செய்யப்பட்ட தாதிகள் முன்னிலையில் அவர்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க கற்றுக் கொள்வார்கள்.
120 மணி நேரம் நீடிக்கும் இந்தப் பயிற்சிக்கு 19 தாதிமை உதவியாளர்கள் பதிந்துகொண்டு உள்ளனர். இந்தப் பயிற்சி இம் மாதம் 11ஆம் தேதி தொழில்நுட்பக் கல்விக் கழகக் கிழக்கு வளாகத்தில் தொடங்கியுள்ளது.

