கொலை செய்ய 'டார்க் வெப்' இணையத்தளம் மூலமாக கூலிப்படையை நாடிய ஆடவர்

கொலை செய்ய 'டார்க் வெப்' இணையத்தளம் மூலமாக கூலிப்படையை நாடிய ஆடவர்

2 mins read
c741546f-ec7c-4b10-b3c3-47358c09bd39
கைது செய்யப்பட்ட எலன் வின்செண்ட் ஹுயி கிம் செங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொறாமையின் உச்சத்துக்குச் சென்ற ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் 'டார்க் வெப்' எனும் இணையத்தளத்தை நாடி அதன் மூலம் தமது முன்னாள் காதலியின் காதலனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவ திட்டமிட்டார்.

ஆனால், அமெரிக்காவில் உள்ள செய்தியாளர் ஒருவர் சிங்கப்பூர் போலிசுக்கு இ்து குறித்து தகவல் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

'டார்க் வெப்' எனும் இணையத் தளத்தை கூகல் போன்ற தேடுதல் தளம் மூலம் அடைய முடியாது. அதை அடைய சிறப்பு கணினி மென்பொருள் வேண்டும். அதைத் தொடர்புகொள்வோர் மற்றும் அந்த இணையத் தளத்தை நடத்து வோரை அறிந்துகொள்வது சிரமம் என்று நீதிமன்றத்தில் கூறப்பட் டது.

எலன் வின்செண்ட் ஹுயி கிம் செங் எனும் 47 வயது ஆடவர், 30 வயது ஆடவரைக் கொலை செய்ய 'கெமோரா ஹிட்மேன்' எனும் இணையத்தளம் மூலம் ஒரு நபரை வேண்டுமென்றே ஏவி விட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

திருமணமான ஹுயி, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் தம்முடன் வேலை செய்யும் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். அதே ஆண்டு நவம்பரில் ஹுயி அந்நிறுவனத்திலிருந்து விலகினாலும் அந்த உறவைத் தொடர்ந்தார்.

தமது மனைவியை விட்டு வர முடியாது என்று ஹுயி கூறியதும் தங்களுக்கிடையிலான உறவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் முடித்துக்கொள்ள அப்போது 30 வயதான அந்தப் பெண் முடிவெடுத் தார்.

இருப்பினும் அவருடனான நட்பைத் தொடர்ந்த ஹுயி, அந்தப் பெண்ணுக்குத் தமது மத்திய சேமநிதியிலும் காப்புறுதித் திட் டத்திலும் இருந்து ஒரு பகுதியை எழுதி வைத்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தப் பெண் மற்றொரு ஆடவ ருடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் சினமடைந்த ஹுயி, அந்தப் புதிய காதலர் யார் என்பதை அறிந்து அவரைக் கொல்ல முடிவெடுத்து, 'கெமோரா ஹிட்மேன்' எனும் இணையத்தளம் மூலம் அந்த ஆடவரைக் கொலை செய்ய ஏவினார்.

பின்னர் கொலை செய்ய வேண் டாம். அவரது வலது கையை மட்டும் வெட்டி விடுங்கள் என்று கூலிப்படைக்கு உத்தரவிட்டார்.

அந்தப் புதிய காதலர் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி கொல்லப்பட திட்டம் தீட்டப் பட்டது.

இத்திட்டம் பற்றி அமெரிக்க செய்தியாளர் ஒருவர் வாஷிங்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திடம் தெரிவிக்க, ஹுயி கைதானார்.