மாணவரின் மரணம்: குற்றத்தை ஒப்புக்கொண்டார் டாக்சி ஓட்டுநர்

மாணவரின் மரணம்: குற்றத்தை ஒப்புக்கொண்டார் டாக்சி ஓட்டுநர்

1 mins read

கிளமெண்டி சாலைச் சந்திப்பில் வலப்பக்கம் திரும்ப முயற்சி செய்த போது எதிர்திசையில் ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்ததைப் பொருட்படுத்தாமல் டாக்சி ஓட்டுநர் ஒருவர் டாக்சியைத் திருப்பினார். அதன் விளைவு ஆபத்தில் முடிந்தது.

அந்தக் காரின் ஓட்டுநரான 21 வயது திரு இங் லி நிங், திரு யாப் கோக் ஹுவாவின் டாக்சியுடன் மோதியதில் டாக்சி பயணியான 19 வயது தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவி கேத்தி ஓங் கை டிங் மரணமுற்றார். டாக்சியில் இருந்த மற்ற பயணிகளான 22 வயது நிரம்பிய திரு ஸோன் லிம் தோ ஜுங், திரு லிம் ஜின் ஜி, திரு டிங் ஜுன் ஹெங் ஆகியோருக்கு மூளை உட்பட பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்கு முன் தமது டாக்சியில் உள்ள பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மூன்று பயணிகள் இருக்கைவார் அணிந்திருந்தனரா என்பதை உறுதி செய்ய வில்லை.

இப்போது டாக்சி ஓட்டுநராக வேலை செய்யாத 55 வயது திரு யாப், கவனக்குறைவாக வாகனமோட்டி, குமாரி ஓங்கின் மரணத்துக்குத் தான் காரணமாக இருந் ததை ஒப்புக்கொண்டார். அந்த நான்கு பயணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி கிளமெண்டி மால் கடைத்தொகுதிக்கு அருகே டாக்சியில் ஏறினர். அவர்கள் என்யுஎஸ் தெம்புசு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர். திரு யாப்புக்கு $10,000 பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.