மறுபயனீடு செய்யக்கூடிய உணவுப் பெட்டிகளை நீங்கள் இந்த மூன்று கடைத்தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலுள்ள கடைகளுக்குக் கொண்டு சென்றால் உங்களுக்குச் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும்.
கழிவுப்பொருட்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆறு மாத இயக்கத்தை ‘த கிளமெண்டி மால்’, ‘த ரயில் மால்’, ‘த சிலேத்தார் மால்’ ஆகிய கடைத்தொகுதிகளில் இவற்றின் உரிமையாளரான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நேற்று அறிவித்தது.
மறுபயனீடு செய்யக்கூடிய உணவுப் பெட்டிகளைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் 80 உணவு, பானக் கடைகளில் தள்ளுபடிகளைப் பெறலாம்.
உதாரணத்திற்கு, காப்பி வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் சொந்த கோப்பைகளை இந்தக் கடைகளுக்குக் கொண்டு சென்றால் அவர்களுக்கு 10 காசு விலைக்கழிவு கொடுக்கப்படும்.
‘ஸீரோ வேஸ்ட் சிங்கப்பூர்’ என்ற அரசுசாரா அமைப்புடன் பங்காளித்துவம் கொண்டுள்ள இந்த இயக்கம் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும்.