சிங்கப்பூரர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சமாளிக்கும் வகையில், நான்காம் தலைமுறைத் தலைவர்கள் வசதி குறைந்தவர்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதோடு, தங்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யவும் பாடுபடுவர்.
ஏற்றத்தாழ்வைச் சமாளித்து, சமூக முன்னேற்றத்தை உறுதிசெய்வது தொடர்பில் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் குறிக்கோள்களை விவரித்தபோது, கல்வி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா இந்த இருமுனை அணுகுமுறை பற்றி குறிப்பிட்டார்.
இவை இரண்டும் முக்கியமான அக்கறைகள் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த சமூக சேவை ஆய்வு மையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது அவர் சுட்டினார்.
"சிங்கப்பூரர்களாக நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். ஒவ்வொரு சிங்கப்பூரரும் முக்கியமானவர். எல்லாரும் செழிப்புற்று, சிறந்தோங்கவே விரும்புகிறோம்," என்றார் அவர்.
"எல்லாருக்கும், வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகள் கிடைக்கும் சமுதாயமாக, தொடக்கப்புள்ளி எதுவாக இருந்தாலும் முன்னேற்
றம் காணும் சமுதாயமாக சிங்கப்பூர் எப்போதும் திகழவேண்டும். ஒருவரின் பின்னணி எதுவாக இருப்பினும், தங்களது குறிக்கோள்களை எட்டி, மகிழ்ச்சியாக வாழும் வகையில் எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
வருமான இடைவெளி அதிகமாக இருந்தால் சமுதாயம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டுவிடும் என்பதால் ஏற்றத்தாழ்வைச் சமாளிப்பது என்பது தேசிய நலன் சார்ந்த விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இது அரசாங்கத்தின் வேலை மட்டுமல்ல. அனைவரையுமே பாதிக்கும் என்பதால் இது நம் ஒவ்வொருவரின் பணியுமாகும்," என்றார் குமாரி இந்திராணி.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஏற்றத்தாழ்வும் சமூக முன்னேற்றமும் நாட்டின் இரு முக்கிய அக்கறைகளாக இருந்து வருகின்றன என்று அவர் சொன்னார்.
"அவற்றைச் சமாளித்து நியாயமான, நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவதே சிங்கப்பூரின் அடிப்படைக் கோட்பாடு," என்று அவர் குறிப்பிட்டார்.
சராசரி ஆயுட்காலம், கல்வி, வீட்டுரிமை போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அவர் சொன்னார். அதே வேளையில், பொருளியல் வளர்ச்சியால் பலர் செழிப்படைந்திருந்தாலும் வளங்களும் பலன்களும் உச்சத்தில் இருப்பவர்களிடமே சென்று சேர்கின்றன என்றும் சுட்டினார்.
அதேபோல, தொழில்நுட்ப வளர்ச்சி உயர் தேர்ச்சிகள் கொண்ட ஊழியர்களுக்கும் குறைந்த தேர்ச்சிகளையுடைய ஊழியர்களுக்கும் இடையே ஆழமான பிரிவை ஏற்படுத்தி விடுகிறது என்றும் இதனால் குறைவான தேர்ச்சிகளைப் பெற்றுள்ள ஊழியர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
இத்தகைய போக்குகள், முந்தைய காலங்களில் இல்லாத புதிய சவால்களை ஏற்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்குத் தீர்வுகாணாவிடில், வசதி குறைந்த சிங்கப்பூரர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடும் என்றும் அது, சிறப்புரிமை பெற்ற சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணும்படி செய்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வசதி குறைந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கச் செய்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் அணுகுமுறை அமையும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்து விவரித்த அவர், வசதி குறைந்தவர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் வழிகள் குறித்து வரும் மாதங்களில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் பகிர்ந்துகொள்வர் என்றும் சொன்னார்.
அத்துடன், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவது தொடர்பில் தமது தலைமையிலான பணிக்குழு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

