கணக்காளர்கள் தங்கள் வழக்கமான வேலைக்கு அப்பால், இணையக் குற்றங்களை எதிர்த்து போரிடுவதற்குத் தங்கள் நிறுவனங்களுக்கு உதவ முடியும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
தடயவியல் கணக்கியல், மின்னிலக்க தடயவியல், நிதிக் குற்றம் தொடர்பான இணக்கம் ஆகிய இணையக் குற்றங்களை எதிர்த்துப் போரிட வேண்டிய முக்கியமான ஆற்றல்கள் என்று நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் சார்ட்டர்ட் கணக் காளர்கள் சங்கத்தின் தடயவியல், இணையப் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டார்.
"அண்மைய காலங்களில், தங் கள் வங்கிக் கணக்குகளில் குளறுபடிகள் இருப்பதை உணரும் பொதுமக்கள் அது குறித்து புகார் அளிக்க சிங்கப்பூர் போலிஸ் படையின் வர்த்தக விவகாரப் பிரிவுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிதிக் குளறுபடிகளுக்கான முழுக் காரணத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்றார் மனிதவள அமைச்சருமான திருவாட்டி டியோ.
"தடயவியல் கணக்கியலையும் மின்னிலக்க தடயவியலையும் சோதனை செய்வதற்கும் கணக்கியல் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் வந்தபோதுதான், இணையத் தற்காப்பு அம்சங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் அறியப்பட்டது.
"இது நமக்கு இந்த மின்னிலக்க யுகத்தில், நிறுவனங்களுக்கு இன்னும் கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர் என்று சொல்கிறது," என்று அமைச்சர் விவரித்தார்.
இந்த மூன்று அம்சங்களில் கணக்காளர்கள் தங்கள் ஆற்றல்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறிய திருவாட்டி டியோ, " தடயவியல் கணக்கியலில் மிகப் பெரிய தரவுத் தொகுப்பில் மோசடி நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கலாம்.
"இரண்டாவதான மின்னிலக்க தடயவியலில் இன்னும் அதிகமான பரிவர்த்தனைகள் மின்னிலக்க மாகவும் நகரக்கூடியதாகவும் இருக்கும்.
"இறுதியாக, கணக்காளர்கள் நிதிக் குற்றம் தொடர்பான இணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்," என்றும் அமைச்சர் கூறினார்.
"இணைய மிரட்டலுக்குத் தாங்கள் விலக்கு பெற்றவை என்று எந்த நிறுவனமும் நினைக்கக்கூடாது. நாம் எவ்வளவுதான் நம்மைப் பாது காக்க நடவடிக்கை எடுத்திருந்தாலும் இணையம் தொடர்பான குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்க வேண்டும்.
"அப்படி சம்பவங்கள் நிகழும்போது நாம் உடனடியாக அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடம் தெரிவித்து, அவர்களுடன் சேர்ந்து புலனாய்வு செய்து அவற்றைக் களைய முதிய தற்காப்பு அம்சங்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும்," என்றும் திருவாட்டி டியோ வலியுறுத்தினார்.
இதன் தொடர்பில் இணையக் குற்றப் புலனாய்வை வலுப்படுத்த உள்துறை அமைச்சு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

