வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மேம்படுத்த உதவி

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மேம்படுத்த உதவி

2 mins read

வேலையிடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன. வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கான முத்தரப்பு கண்காணிப்புக் குழுவின் ஓராண்டு உதவித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த உதவிகள் வழங்கப்படும்.

சாட்ஸ் இன்ஃபிளைட் கேட்டரிங் நிலையத்தைச் சுற்றிப் பார்த்தபோது உதவித் திட்டம் பற்றி கண்காணிப்புக் குழு நேற்று அறிவித்தது. முன்னோடித் திட்டத்தில் பங்கெடுக்க அழைக்கப்பட்ட 20 நிறுவனங்களில் இந்த கேட்டரிங் நிறுவனமும் ஒன்று.

திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பில் மூன்று நிலை அணுகுமுறையில் வழிகாட்டுதல்களைப் பெறும்.

மதிப்பீடு, குறுக்கீடு, கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு ஆகியன அந்த மூன்று நிலைகள்.

மதிப்பீட்டு நிலையில் நிறுவனங்களின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நிர்வாகத்தில் உள்ள அபாயங்கள், இடைவெளிகள் கண்டறியப்படும். ஊழியர்களின் சுகாதார நிலவரமும் பதிவு செய்யப்படும்.

வேலை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க அபாயங்கள், சுகாதாரப் பிரச்சினைகளை நிறுவனங்கள் சரிசெய்வது குறுக்கீட்டு நிலை. நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு, சுகாதார நிர்வாக முறைகளை மாற்றுவது, சுகாதார வாழ்க்கைமுறைத் திட்டங்கள், வேலை மறுவடிவமைப்பு போன்ற குறுக்கிடல் திட்டங்களை வடிவமைப்பது ஆகியவற்றின் மூலம் இந்த நிலை செயல்படுத்தப்படும்.

இறுதியாக, குறுக்கீட்டுத் திட்டங்களின் திறன் பற்றி கண்காணித்து மதிப்பாய்வு செய்யப்படும்.

கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்கு, உணவு மற்றும் பானம், துப்புரவு ஆகிய துறைகள் இந்த மூன்று நிலை வழிகாட்டுதலுடன் கூடுதலாக ஆலோசனை சேவைகளையும் பெறும்.

நேற்றைய பார்வையிடலின்போது சுகாதாரம், வேலையிடப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பு பற்றி சுகாதார மூத்த துணை அமைச்சரும் முத்தரப்பு கண்காணிப்புக் குழுவின் இணைத் தலைவருமான டாக்டர் ஏமி கோர் வலியுறுத்தினார்.

இந்தக் குழுவின் மற்றொரு இணைத் தலைவரான மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, ஊழியர்கள் அதிக காலம் வேலையில் இருப்பதால், பாதுகாப்பைப்போலவே, சுகாதாரமும் மிகவும் முக்கியம் என்றார்.