கைபேசி 'விளையாட்டு பரிசோதகராக' ஆப்பிள் ஐஓஎஸ் பணிக்கு ஆள்சேர்க்கும் புதிய வகை மோசடி பரவுவதாக போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இத்தகைய மோசடிகள் பற்றிய புகார் எழுந்துள்ளதையடுத்து போலிசாரின் எச்சரிக்கை வந்துள்ளது.
கைபேசியில் விளையாட்டுகளைப் பரிசோதிக்கும் பணிக்கு அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி, ஒரு குறிப்பிட்ட 'ஆப்பிள் ஐடி'யில் பதிவு செய்யச் சொல்லும் மோசடிக்காரர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தினால் கைபேசி முடக்கப்படும். குறிப்பிட்ட தொகையை மோசடிக்காரர்களுக்கு அளித்த பிறகே, கைபேசியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.
அதனால், அறிமுகமில்லாதவர்கள் வழங்கும் 'ஆப்பிள் ஐடி'களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர்களுக்குப் பணம் அனுப்புதல், வங்கிக் கணக்கு போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்குதல் வேண்டாம் எனவும் போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐபோன் முடக்கப்பட்டால் ஆப்பிள் நிறுவனத்தை நாடலாம். மோசடிக்காரர்கள் பற்றிய விவரம் அளிக்க 1800-255-0000 என்ற எண்ணையோ அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப் பக்கத்தையோ நாடலாம்.

