புக்கிட் பாத்தோக் வீட்டில் தீ; மீட்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்

புக்கிட் பாத்தோக் வீட்டில் தீ; மீட்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்

2 mins read
210b2ef0-51ec-4648-bc28-2ba99dc1fd51
புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 293Dஇன் 26ஆவது மாடியில் தீப்பிடித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தம்பதியரில் ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த புக்கிட் பாத்தோக் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தம்பதியரில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த 40 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டார்.

வியாழக்கிழமை அதிகாலையில் வீவக வீடு தீப்பிடித்துக்கொண்டது. அதிலிருந்து மீட்கப்பட்ட கணவன், மனைவி உயிருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், ஆடவருடைய உடலில் 40 விழுக்காட்டு தீப்புண் காயங்கள் ஏற்பட்டிருந்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேற்று பகல் அவர் இறந்துவிட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்தே அவர் 'கோமா' நிலையில் இருந்து வந்தார். அவரின் மூளைக்குப் போதுமான பிராண வாயு சென்று சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 293Dஇன் 26ஆவது மாடியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து கணவன், மனைவி இருவரும் தீயணைப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.

சுவாசக் கருவிகளை முகத்தில் அணிந்தவாறு அதிகாரிகள் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, ஆடவர் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்பட்டது.

முதலில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர், பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார்.

அவருடைய மனைவி, புகையை அளவுக்கு அதிகமாக உள்ளிழுத்ததன் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இது ஒரு தீவிபத்து என்று கூறியுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கருகிய தனிநடமாட்டச் சாதனங்கள் தீச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையை அடுத்து நேற்று தெரிவித்தது.

தம்பதியருக்குப் பிள்ளைகள் இல்லை என்றும் ஒரு நாயையும் ஒரு கிளியையும் அவர்கள் வளர்த்து வந்ததாகவும் அண்டைவீட்டார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

நெருப்பிலிருந்து தப்பிக்க, இருவரும் வீட்டுக்கு வெளியே உள்ள குளிரூட்டுச் சாதனத்துக்கான இடத்தில் இறங்கி நின்றனர். அப்போது செல்லப்பிராணிகளைக் காப்பாற்றுவதற்காக ஆடவர் மறுபடியும் எரிகிற வீட்டுக்குள் சென்றதாக ஷின் மின் நாளிதழ் நேற்று தெரிவித்தது.

ஆனால் செல்லப்பிராணிகளைக் காப்பாற்ற சென்றவர் பின்னர் கழிவறை அருகே மயங்கி விழுந்து விட்டார்.

ஆடவர் மற்ற குடியிருப்பாளர்களுடன் நல்லுறவு கொண்டிருந்ததாகவும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் என்றும் அண்டைவீட்டார் கூறினர்.

அத்-து-டன் அவர் ஒரு விலங்-குப் பிரி-யர் என்-றும் கூறப்-பட்-டது.