தரையில் விழுந்த உணவை மறுபடியும் எடுத்து வைத்துக்கொண்டார் உணவுக்கடை ஊழியர்

தரையில் விழுந்த உணவை மறுபடியும் எடுத்து வைத்துக்கொண்டார் உணவுக்கடை ஊழியர்

1 mins read
313e708e-3119-43dc-947e-e8987104c9d7
PHOTO: NEB MIL SE / FACEBOOK -

தரையில் விழுந்த உணவை அங்கிருந்த உணவுக்கடை ஊழியர் எடுத்து மறுபடியும் மற்ற உணவுடன் சேர்த்து வைத்த செய்தி ஒன்று இணையத்தில் வலம் வந்தவண்ணம் உள்ளது.

சில 'டம்பிளிங்ஸ்' தரையில் விழுந்ததை அடுத்து 'நூடல்ஸ்' கடை ஊழியர் அவற்றை எடுத்து வேறு 'டம்பிளிங்ஸ்' இருந்த ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்தார்.

ஹவ்காங் அவென்யூ 4ன் புளோக் 682ல் உள்ள 'பொந்தியான் வான்தான் நூடல்ஸ்' கடையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அங்கு சாப்பிடச் சென்ற ஒரு வாடிக்கையாளர் தன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்டதும் உடனே அனைத்து 'டம்பிளிங்' உணவையும் குப்பையில் வீசிடுமாறு அந்த நபர் ஊழியரிடம் கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் வாடிக்கையாளரிடம் சொந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போகச் சொல்லி அந்த ஊழியர் கூச்சலிட்டதுடன் தனக்கு நேரம் கிடைக்கும்போது உணவைத் தூக்கியெறிவதாகவும் சொன்னதாகப் பதிவில் இருந்தது.

இதன் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக கடை ஊழியரைக் கண்டித்ததாகவும் 'பொந்தியான் வான்தான் நூடல்ஸ்' கடையின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

அத்துடன் சிங்கப்பூர் உணவு அமைப்பும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வருகிறது.