தங்களுக்கு உள்ள சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைச் சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் சோதித்துக்கொள்ளவும் அதற்கான ஆலோசனையைப் பெறவும் 1,300க்கும் மேற்பட்டோர், இந்து அறக்கட்டளை வாரிய மருத்துவ ஆதரவு சேவை பிரிவும் மீடியாகார்ப் ஒலி 96.8 வானொலியும் இணைந்து ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தின் பிஜிபி மண்டபத்தில் நேற்று நடத்திய சுகாதார விழாவில் பங்கேற்றனர்.
நாட்பட்ட நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும் இவ்விழா நடந்தது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை போன்ற 12 சுகாதாரப் பங்காளிகளும் மக்கள் கழக நற்பணிப் பேரவை உட்பட 14 சமூகப் பங்காளிகளும் இவ்விழாவுக்கு ஆதரவு வழங்கின.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்து அறக்கட்டளை வாரிய மருத்துவ ஆதரவு சேவை பிரிவின் தலைவர் டாக்டர் லி. ஜெயராம், "சுகாதார மேம்பாட்டு வாரியத்துடனான பங்காளித்துவத்தில் பரிசோதனை முறை மேம்பட்டுள்ளது என்றும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவமனைகளிலும் மருத்துவ நிலையங்களிலும் தொடர் சிகிச்சை, ஆலோசனை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனர் என்றும் கூறினார்.
கண், காது, பல் ஆகியவற்றின் செயல்திறன் சோதனைகள், நீரிழிவு நோய், ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கான சோதனைகள் என 20க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கூடங்கள் இவ்விழாவில் அமைக்கப்பட்டன.
பெண்கள் 'மெமோகிராம்' பரிசோதனையைப் பற்றி அறியவும் அதற்கான பரிசோதனைக்கு மருத்துவ நிலையங்களில் பதிவு செய்யும் வசதியும் விழாவில் இருந்தது.
200க்கும் மேற்பட்ட தொண்டூழி யர்களின் ஒத்துழைப்பில் இவ்விழா நடந்ததென்று ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த திருவாட்டி த.சாந்தா சொன்னார்.
"ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் விழிப்புணர்வை உணர்த்தவும் சுகாதார மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்யும் திட்டங்களில் பொதுமக்களை ஈடுபடுத்தவும் இந்த முயற்சி வழிவகுக்கின்றது.
"பல சுகாதார, சமூக பங்காளிகளை இம்முயற்சியில் ஈடுபடுத்திய இந்து அறக்கட்டளை வாரியத்தின் முயற்சியை அங்கீகரிக்கிறோம்," என்று தெரிவித்தார் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் சுகாதாரப் பரிசோதனை, நிர்வாகப் பிரிவின் உதவி இயக்குநர் திருமதி தேவிகா.
"பணியாற்றும் நிறுவனத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வது உண்டு.
"ஆனால் இவ்விழாவில் கலந்துகொள்ளும் அனுபவம் மாறுபட்டது. ஏனெனில், ஒவ்வொரு பரிசோதனைக் கூடத்திலும் மருத்துவ நிபுணர்கள் அதிக நேரம் எடுத்து கேள்விகளுக்கு விளக்கம் சொல்லி, ஆலோசனை வழங்கியது பாராட்டுக்குரியது," என்றார் ராணுவ சாதனங்கள் துறையில் பணியாற்றும் ஆண்டிசாமி சுப்பிரமணியம், 64.
மூன்றாவது முறையாக தமது முதலாளியின் பரிந்துரையின் பேரில் இவ்விழாவில் கலந்துகொண்டார் பணிப்பெண்ணாக பணியாற்றும் 42 வயது குமாரி சித்ரா ஆறுமுகம்.
ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனைகளுக்குச் சென்ற அவர் இத்தகைய ஏற்பாடுகள் தம்மைப் போன்ற பணிப்பெண்களுக்கு உதவியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
விழாவில் பங்குபெற்றவர்களுக்கு ஆரோக்கிய உணவுப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
ஒலி 96.8 வானொலியின் படைப் பாளர்கள், வசந்தம் தொலைக்காட்சிக் கலைஞர்கள் மேடையேற்றிய பாடல், நகைச்சுவை, விளையாட்டு, சுகாதாரப் பேச்சு அங்கங்கள் விழாவுக்கு சிறப்பு சேர்த்தன.
"இந்து அறக்கட்டளை வாரியம் சமூகம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பங்காளிகளுடன் சேர்ந்து நாட்பட்ட நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் ஆரோக்கிய வாழ்க்கைமுறை, வழக்கமான சுகாதார பரிசோதனை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறது. இன்றயை சுகாதார விழாவில் பல பங்காளித்துவ அமைப்புகள் சமூகத்திற்கு சேவையாற்ற ஒன்று சேர்ந்திருப்பது மனநிறைவு அளிக்கிறது.
இந்து அறக்கட்டளை வாரியம், நமது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை, சுகாதார மேம்பாட்டு வாரியம் போன்றவற்றுடன் இணைந்து மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்," என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

