கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னர், சாலைப் போக்குவரத்து திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு வந்தபோது, சாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதுபற்றி இங்கு ஆராய்வோம். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் மோதல் நிகழ்வதற்குமுன் பேருந்து ஓட்டுநரை எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை அமலாக்கியதைத் தொடர்ந்து விபத்துகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்திருக்கிறது. நிறுவனத்தின் 3,000 பேருந்துகளிலும் "மொபிலாய்" எனப்படும் அதிநவீன ஓட்டுநர் உதவித் தொழில்நுட்பம் இப்போது பொருத்தப்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் 400 மேன் யூரோ பேருந்துகளிலும் 50 வோல்வோ டீசல் ஹைபிரிட் பேருந்துகளிலும் மோதல் எச்சரிக்கை தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளது. நிலப் போக்குவரத்து வாரியம் வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்திலும் இந்தத் தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என ஆணையத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
ஓட்டுநரின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் 90 விழுக்காடு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் நிறுவனத் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் டெம்மி டான் தெரிவித்தார். வேக வரம்பை மீறும்போது, கடுமையாக வேகத்தைக் கூட்டும்போது அல்லது திடீரென பிரேக் போடும்போது இத்தொழில்நுட்பம் ஓட்டுநர்களை எச்சரிக்கும். ஓட்டுநர்களை மேலதிகாரிகள் கண்காணிக்கவும் இது துணை புரிகிறது.
மேலும், ஓட்டுநரின் முகத்தைப் பார்த்து சோர்வையும் கவனச்சிதறலையும் அடையாளம் காணும் "கோல்டன் ஐ" கண்காணிப்பு முறையையும் எஸ்பிஎஸ் டிரான்சிட் முன்னோட்டமாகச் சோதனை செய்தது. சோதனையின் முடிவுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகத் திருவாட்டி டான் தெரிவித்தார்.
கோ-அஹேட் நிறுவனமும் அதன் பேருந்துகளில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் விற்பனையாளர்கள் வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்துவதற்குத் தள்ளுபடி வழங்குவது மற்றொரு யோசனை. ஆனால், கார்கள் நேராகத் தொழில்சாலையில் இருந்து வருவதால் விற்பனை நிறுவனங்களுக்கு இது சாத்தியமில்லை என்கிறார் சிங்கப்பூர் வாகன வர்த்தகர் சங்கத்தின் உதவிச் செயலாளர் திரு ரிச்சர்ட் லிம். பாதுகாப்பு அம்சங்கள் உற்பத்தியின்போது பொருத்தப்படவேண்டும் என்றார் அவர்.
இதற்குப் பதிலாக, கார்களை வாங்குவோர் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்துவதற்கு ஊக்குவிப்பாகக் காப்புறுதி நிறுவனங்கள் குறைவான சந்தாக் கட்டணங்கள் விதிக்கலாம் என்று அவர் யோசனை கூறினார்.
போக்குவரத்து குற்றம் புரியும் காரின் மதிப்புக்கு ஏற்ப அபராதம் விதிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தசெரா.
ஆனால், வருமானத்திற்கேற்ப அபராதம் விதிப்பதற்கு மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
வலதுபக்கம் திரும்பும் வாகனங்கள், சாலை நிலவரத்தின் அடிப்படையில் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் முறையை நீக்கிவிட்டு, வலதுபக்கம் திரும்பும் எல்லா வாகனங்களையும் "சிவப்பு, மஞ்சள், பச்சை" அம்புக்குறிகளுடன் கட்டுப்படுத்தும் நடைமுறையின் அமலாக்கத்தைத் துரிதப்படுத்துமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு ஐந்து ஆண்டுகள் எடுக்கும் என்றும், இதுவரை 275 சாலை சந்திப்புகளில் இந்த அம்புக்குறிகள் நிறுவப்பட்டிருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது. சுமார் ஆயிரம் சாலை சந்திப்புகளில் அம்புக்குறிகள் நிறுவப்படவேண்டும்.
பொதுமக்களுக்கு அறிவுபுகட்டவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கூடுதல் முயற்சி எடுக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தினார்கள். மற்றவர்களுக்கு வழிவிடுமாறு ஓட்டுநர்களுக்கு நினைவூட்டுதல், திரும்புவதற்கு முன்பாகப் பார்வையில் படாத இடங்களைக் கவனித்தல் போன்றவை இவற்றுள் அடங்கும்.
எது எப்படி இருந்தாலும், சாலைப் பாதுகாப்பு கலாசாரத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்றும், இதற்கு சிங்கப்பூர் இன்னும் நெடுவழி செல்லவேண்டும் என்றும் சாலைப் பாதுகாப்பு ஆய்வாளரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான சின் ஹூங் சொர் கூறினார்.
"சாலைப் பாதுகாப்பு கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கு மற்றவர்கள்மீதான அக்கறையை வளர்க்கவேண்டும். விதிமுறைகளின்மூலம் இதனைச் செய்யமுடியாது," என்றார் அவர்.
"சிங்கப்பூர் சாலைகள் மொத்தத்தில் ஓரளவு பாதுகாப்பாகவே உள்ளன. இதுபோன்ற சிறுசிறு நடவடிக்கைகள்மூலம் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லாததொரு தருணத்தில் நாம் இருக்கிறோம். சாலையில் மற்றவர்கள்மீது அக்கறை காட்டும் வலுவான பண்பை வளர்ப்பதே இதற்குத் துணை புரியும்," என்றார் அவர்.

