உலகம் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய யோசனைகள், தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்பட்ட இணைப்புகள் காரணங்களாக உள்ளன. இனி அந்த முன்னேற்றத்தைத் தடைசெய்யச் சுவர்கள் எழுப்புவதா அல்லது மேலும் பாலங்கள் அமைப்பதா என்று இளைய தலைமுறையினர் முடிவெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.
பல நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த கிட்டத்தட்ட 93 மாணவர்களும் ஆசிரியர்களும் அடங்கிய குழுவை திரு சான் நேற்று ஹுவா சோங் கல்வி நிலையத்தில் சந்தித்தபோது இதனைக் குறிப்பிட்டார்.
அக்குழு சிங்கப்பூர் வந்திருப்பது, கடந்த ஆண்டுகளில் பல நாடுகளுடன் ஏற்பட்டுள்ள நல்லுறவுக்கு ஒரு சான்றாக இருப்பதாகவும் திரு சான் சுட்டினார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனின் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற திரு சான், மாதம் ஒரு முறை மட்டுமே தம்முடைய குடும்பத்துடன் தொடர்புகொண்டதாகவும் அதுவும் அது விமானம் வழி அனுப்பப்பட்ட கடிதம் மூலமாக இருந்ததாகவும் பகிர்ந்துகொண்டார்.
ஆனால் இன்று எல்லோரும் 'ஸ்கைப்', 'வாட்ஸ்அப்' போன்றவற்றின் மூலம் உடனுக்குடன் தொடர்புகொள்கிறார்கள்.
அத்துடன் மருத்துவ ஆய்வு, உற்பத்தி, படத் தயாரிப்பு போன்றவை எல்லை தாண்டிய இயல்பைக் கொண்டதாய் மிக எளிதாகிவிட்டன.
இவ்வாறு அதிக இணைப்பு வந்தாலும் தடைகளும் ஏற்படுகின்றன. இதனால் மாற்றங்களை எதிர்கொள்ள நாடுகள் தங்கள் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவுவது முக்கியம்.
ஒருங்கிணைப்பை நாம் கடைப்பிடிக்கிறோமா அல்லது நம் எல்லைகளை மூடிக்கொள்கிறோமா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சான், பாலங்கள் அமைக்க துணிச்சலுடனும் தலைமைத்துவத்துடனும் செயல்படுமாறு வந்திருந்தோரை ஊக்குவித்தார்.
உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு முறையின் பலன்களை அறிந்திருக்கவும் வேண்டும் என்றார் அவர்.
உலகம் தொடர்ந்து பிளவுபட்டும் பாதுகாப்புவாதம் கொண்டும் இயங்கினால் இனிவரும் தலைமுறையினரால் செழிப்பையோ முன்னேற்றத்தையோ காண முடியாது என்றும் திரு சான் அறிவுறுத்தினார்.
நிகழ்வில் பங்கேற்றோர் ஆசிய பசிபிக், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் 27 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இக்குழு வெள்ளிக்கிழமை வரை சிங்கப்பூரில் இருக்கும்.

