17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த என்யுஎஸ் விரிவுரையாளர் குற்றவாளி

17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த என்யுஎஸ் விரிவுரையாளர் குற்றவாளி

2 mins read
f875385d-a0e5-462d-b24c-4c3100c47050
மானபங்க குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முன்னாள் மூத்த உளவியல் விரிவுரையாளரான 59 சான் சேங் 17 ஆண்டுகளாக மலேசியாவில் தலைமறைவாக இருந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். ஐந்து பதின்ம வயது மாணவர்களை இவர் மானபங்கம் செய்ததன் தொடர்பில் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நேற்று நிரூபிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மூத்த உளவியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்த 59 வயது சான் சேங், ஐந்து பதின்ம வயது மாணவர்களை மானபங்கம் செய்ததன் தொடர்பில் குற்றவாளி என்று நேற்று நிரூபிக்கப்பட்டது.

முன்னாள் என்யுஎஸ் விரிவுரையாளராக இருந்த சான், பள்ளி முகாம் ஒன்றில் ஐவரையும் மனபங்கம் செய்ததைத் தொடர்ந்து மலேசியாவுக்குத் தப்பியோடி 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். வழக்கு விசாரணையை அடுத்து மானபங்கம் தொடர்பில் சான் மீது இருந்த ஐந்து குற்றச்சாட்டுகள் நேற்று நிரூபணமாகின.

அத்துடன் மேலும் ஏழு மானபங்க குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கான மூன்று நாள் பள்ளி முகாம் 1999ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓல்ட் ஏர்போட் ரோட்டின் கில்மார்ட் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது சான், ஐந்து ஆண் மாணவர்களையும் மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

ஒரு மாணவர்த் தலைவர்மூலம் மானபங்கச் சம்பவங்களைப் பற்றி அறிந்துகொண்ட ஓர் ஆசிரியர், பின்னர் பள்ளி முதல்வரிடம் தெரிவித்ததை அடுத்து போலிசில் புகார் செய்யப்பட்டது. கைதான சான் பிணையில் விடுவிக்கப்பட்டு நவம்பர் 29ஆம் தேதியன்று நீதிமன்றத்திற்கு வரத் தவறினார். இதை அடுத்து அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உளவியல் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றிய சானுக்கு, 'புரோகேம்ப்ஸ்' என்ற சொந்த நிறுவனம் இருந்ததாகக் கூறப்பட்டது.

இளையர்களுக்குப் படிப்பு தொடர்பான திறன்களைக் கற்றுத்தருவதுடன் பள்ளி விடுமுறைகளின்போது பிள்ளைகளுக்கு முகாம்களும் ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வேலைக்கு வராத காரணத்தால் என்யுஎஸ், சானின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

60,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சான், அடுத்த திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும்.