ஒன்பது வயது சிறுவன் மின்ஸ்கூட்டரால் காயம்

ஒன்பது வயது சிறுவன் மின்ஸ்கூட்டரால் காயம்

1 mins read

பேருந்தை விட்டு இறங்கிய ஓர் ஒன்பது வயது சிறுவன் மீது மின்ஸ்கூட்டர் ஓட்டி வந்த யப் தனபாடி, 19, மோதினார். கவனக்குறைவாகத் தன் மின்ஸ்கூட்டரை ஓட்டிய குற்றத்தை நேற்று முழுநேர தேசிய சேவையாளரான யப் ஒப்புக்கொண்டார். 'ஜேகியூப்' அங்காடி நிலையத்திற்கு மார்ச் 24ஆம் தேதியன்று சென்றுகொண்டிருந்த யப், தன் மின்ஸ்கூட்டரில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் போனதாகக் கூறப்பட்டது.

அப்போது ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ன் புளோக் 210 முன்னால் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தை யப் நெருங்கியபோது அங்கிருந்த பேருந்து சேவை '99'லிருந்து ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் இறங்கினர்.

பேருந்திலிருந்து யாரும் இறங்கமாட்டார்கள் என்ற ஊகத்தில் யப் தன் மின்ஸ்கூட்டரை நிறுத்தவில்லை. ஆனால் திடீரென்று தந்தையும் மகனும் இறங்குவதைப் பார்த்ததும் யப்பால் தன் சாதனத்தை நேரத்துடன் நிறுத்த முடியவில்லை.

மின்ஸ்கூட்டர் மோதி கீழே விழுந்த சிறுவனுக்கு வலது காதிலும் வலது முழங்காலிலும் காயம் ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து புகார் அளிப்பதற்காக சிறுவனின் தந்தை யப்பைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். சிறுவன் ஜூரோங் பலதுறை மருந்துகத்திற்குச் சிகிச்சை பெறக் கொண்டு செல்லப்பட்டான்.

இதன் தொடர்பில் யப் கண்காணிப்பு ஆணைக்குத் தகுதிபெறுவது குறித்து நீதிபதி அறிக்கை கோரியுள்ளார்.

யப் தற்போது $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யப்பின் வழக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.